மானாவாரி சாகுபடியில் 'அடி மேல் அடி' மக்காச்சோள விவசாயிகள் வேதனை

உடுமலை: மானாவாரி சாகுபடியில், மகசூல் பாதியாகியுள்ள நிலையில், விலையும் சரிந்து வருவது மக்காச்சோள விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழைக்கு மக்காச்சோளம் பல ஆயிரம் ஏக்கரில் விதைப்பு செய்யப்பட்டது. வழக்கமாக இந்த சீசனில், கொண்டைக்கடலை, கொத்தமல்லி உள்ளிட்ட சாகுபடிகளையே விவசாயிகள் மேற்கொள்வார்கள்.

கடந்தாண்டு மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைத்ததால், பெரும்பாலான விவசாயிகள் பிற சாகுபடிகளில் இருந்து இச்சாகுபடிக்கு மாறினர். இந்நிலையில், கதிர்கள் பிடிக்கும் தருணத்தில் போதிய மழை பெய்யவில்லை.

இதனால், மகசூல் வெகுவாக பாதித்தது. ஏக்கருக்கு, நுாறு கிலோ, 35 முதல் 40 மூட்டை வரை மக்காச்சோளம் மகசூல் இருக்கும். நடப்பு சீசனில், ஏக்கருக்கு 20 மூட்டை வரை மட்டுமே விளைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். அதே வேளையில், அறுவடை துவங்கியதும், விலை சரிவும் ஏற்பட்டது.

துவக்கத்தில், நுாறு கிலோ மூட்டைக்கு, 2 ஆயிரத்து 300 ரூபாய் வரை விலை கிடைத்தது. நேற்று உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், மூட்டை விலை ரூ.1,760 ஆக இருந்தது. கிராமங்களில் இதை விட குறைவான விலைக்கே மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: இறவை சாகுபடியில் மேற்கொள்ளும் அனைத்து செலவுகளையும், மானாவாரி மக்காச்சோளத்துக்கும் செய்தோம். ஆனால், மகசூல் பாதியாக குறைந்தது; விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இருப்பு வைத்தாலும் விலை நிலவரம் மாறுமா என்பது தெரியவில்லை. படைப்புழு தாக்குதல் என, இச்சாகுபடியில் தொடர் பிரச்னைகள் நிலவியும் அரசு கண்டுகொள்ளவில்லை.

சீசன் சமயத்தில், மானிய விலையில், விதை விற்பனை செய்த வேளாண்துறையினரும், மகசூல் பாதிப்பு குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை.

விலை வீழ்ச்சியை தடுக்கவும், நடவடிக்கை இல்லை. இதனால், இரு வட்டாரங்களிலும், பல ஆயிரக்கணக்கான மானாவாரி விவசாயிகள் பாதித்துள்ளனர்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement