மீண்டு வருவாரா அபிஷேக் சர்மா: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆமதாபாத்: உலக கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா, ரன் கணக்கை ஆரம்பிக்க வேண்டுமென இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணியின் அதிரடி துவக்க பேட்டர் அபிஷேக் சர்மா. 'டி-20' அரங்கின் 'நம்பர்-1' வீரரான இவரது 'ஸ்டிரைக் ரேட்' 192.43. தற்போதைய 'டி-20' உலக கோப்பை தொடரில் தடுமாறுகிறார். அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்துக்கு எதிராக 'டக்' அவுட்டானார். வயிறு பிரச்னையால் நமீபியா உடன் விளையாடவில்லை. கடந்த 7 'டி-20' போட்டிகளில் 5ல் 'டக்' அவுட்டானார்.


'சுழல்' பலவீனம்: 'பவர் பிளே' ஓவரில் பேட்டை சுழற்றி 'டீப் கவர் பவுண்டரி' திசையில் ரன் சேர்ப்பதே இவரது பலம். 'ஆப்-ஸ்பின்னரை' சமாளிக்க முடியாதது பலவீனம். வரும் 22ல் ஆமதாபாத், மோடி மைதானத்தில் நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'சூப்பர்-8' போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இவருக்கு தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், அல்லது ஜார்ஜ் லிண்டே 'பவர்பிளே' ஓவரில் 'சுழல்' வலை விரிக்கலாம். கேஷவ் மஹாராஜும் தொல்லை கொடுக்கலாம். நேற்று மூவரும் பயிற்சியின் போது, இடது கை பேட்டருக்கு பந்துவீசினர். இதனால் அபிஷேக் கவனமாக விளையாட வேண்டும்.


தன்னம்பிக்கை தேவை: இது பற்றி பிரிமியர் தொடரின் முன்னணி பேட்டிங் பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில்,''அபிஷேக் சர்மா 'ஆப்-ஸ்பின்னர்'களின் பந்துகளை சிறப்பாக விளையாடுவார். முதல் போட்டியில் அமெரிக்காவின் அலி கான் வீசிய மோசமான பந்தை, 'டீப் எக்ஸ்டிரா கவர்' திசையில் அடித்தார். இது சிக்சருக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக 'கேட்ச்' ஆனது. இவருக்கு பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷ் கோடக் உரிய தன்னிம்பிக்கை அளிக்க வேண்டும். சில போட்டிகளில் சோபிக்காததால், சோர்ந்து போகக்கூடியவர் அல்ல அபிஷேக். 'டி-20' உலக கோப்பை தொடரில், இந்திய அணிக்கு வலுவான துவக்கம் தர வேண்டியதன் முக்கியத்துவம் தெரியும். இவருக்கு ஊக்கம் அளிக்க சிறிய உதாரணம் சொல்லலாம். 1994ல் நடந்த சிங்கர் கோப்பை- முத்தரப்பு ஒருநாள் தொடரில் சச்சின் தொடர்ந்து 3 போட்டிகளில் 'டக்' அவுட்டானார். அடுத்து 8 ரன் எடுத்தார். 5வது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 115 ரன் விளாசி, இழந்த 'பார்மை' மீட்டார். இதே போல அபிஷேக் சர்மாவும், வரும் போட்டிகளில் சாதிக்க வேண்டும்,''என்றார்.

'வீடியோ' பாருங்க

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகையில்,''அபிஷேக் சர்மா, 10, 15, 20 ரன் எடுத்திருந்தால் கூட நம்பிக்கையுடன் இருந்திருப்பார். 3 முறை 'டக்' அவுட் ஆனது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். பந்துகளை அடித்து நொறுக்கியவர், திடீரென சரிவை சந்தித்துள்ளார். யாராவது ஒருவர் அவரது அறைக்கு சென்று, முன்பு அதிரடியாக ஆடிய போட்டிகளின் 'வீடியோ'வை காண்பிக்கலாம். அவர் எத்தகைய சிறந்த பேட்டர் என்பதை உணர செய்ய வேண்டும்,''என்றார்.


மல்லுக்கட்டும் மார்கல் சகோதரர்கள்


கிரிக்கெட் அரங்கில் அமர்நாத், பதான், பாண்ட்யா, சாப்பல், வாக் உள்ளிட்ட சகோதரர்கள் விளையாடியுள்ளனர். இப்போது பயிற்சியாளர்களாக மார்கல் சகோதரர்கள் எதிர்த்து களமிறங்குவது புதுமை.

இந்திய அணியின் 'பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் மார்னே மார்கல், 41, உள்ளார். இவரது அண்ணனும் முன்னாள் வீரருமான ஆல்பி மார்கல், 44, தென் ஆப்ரிக்க அணியின் ஆலோசகராக உள்ளார். இதனால் இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையிலான 'சூப்பர்-8' போட்டி, சகோதரர்களின் மோதலாக மாறியுள்ளது.


இது பற்றி ஆல்பி மார்கல் கூறுகையில்,''நாங்கள் அதிகம் பேசிக் கொள்வதில்லை. எங்களது தாயார் மரியானா தான் இந்தியா அல்லது தென் ஆப்ரிக்க அணிக்கு ஆதரவு அளிப்பதா என்ற கவலையில் இருப்பார். பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய போது, பயிற்சி நுணுக்கங்களை பிளமிங்கிடம் கற்றுக் கொண்டேன்,''என்றார்.

மாற்றம் வருமா
'டி-20' உலக கோப்பை பைனலில் (2024) இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு தென் ஆப்ரிக்கா பதிலடி தர முயற்சிக்கும் என்பதால், 'சூப்பர்-8' போட்டியில் அனல் பறக்கும். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அக்சர் படேல் இடம் பெறலாம். அபிஷேக் சர்மாவை நீக்க வாய்ப்பு குறைவு.


இது பற்றி மார்னே மார்கல் கூறுகையில்,''உலகத் தரம் வாய்ந்த வீரர் அபிஷேக் சர்மா. இவரை நீக்குவது பற்றி விவாதிக்கவில்லை. வலை பயிற்சியில், பந்துகளை நன்கு விளாசினார். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்,''என்றார்.

சமாளிக்க முடியுமா

தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஷான் போலக் 52, கூறுகையில், ''இந்திய அணியின் பவுலிங் வலுவாக உள்ளது. பும்ராவை (3 போட்டி, 4 விக்.,) பொறுத்த வரையில் 'பவர் பிளே', கடைசி கட்ட ஓவர்களில் மிரட்டலான பந்து வீச்சை வெளிப்படுத்துவார். 'மிடில் ஓவர்களில்' ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் வல்லவர் வருண் சக்ரவர்த்தி (4 போட்டி, 9 விக்.,). இவர்களை சமாளிப்பது சிரமம்,'' என்றார்.

Advertisement