தி.மு.க.,விற்கு சாபக்கேடு உள்ளது 5 ஆண்டுக்கு மேல் நீடித்ததில்லை முன்னாள் அமைச்சர் சண்முகம் விமர்சனம்
விழுப்புரம்: 'ஆட்சி முடியும் காலத்தில், நல்லாட்சி போல், மாய தோற்றத்தை தி.மு.க., ஏற்படுத்த முயற்சி செய்கிறது' என அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 1967ம் ஆண்டு முதல், அ.தி.மு.க., - தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும் கட்சிகள். தற்போது, அவர் வந்து விட்டார், இவர் வந்து விட்டார் என ஊடகங்கள் சொல்வதும் வியாபாரத்துக்கான பிரசாரங்கள் தான். கள நிலவரம் அப்படி இல்லை.
எப்போதும் அ.தி.மு.க.,வை குறைத்து மதிப்பிடாதீர்கள். எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்திலிருந்தே 52 ஆண்டுகளாக, அ.தி.மு.க., வெற்றி பெறும் என ஊடகங்களும், பத்திரிக்கைகளும் வெளிப்படையாக சொன்னதில்லை. ஆனால், அ.தி.மு.க., வெற்றி பெற்று நல்லாட்சி நடத்தி வந்துள்ளது.
தி.மு.க.,வினர் அதிகாரத்தையும், ஆட்சியையும் வைத்துக்கொண்டு, தவறுகளை மறைத்து பூசி மொழுகும் வேலையை செய்கின்றனர்.
ஆனால், மக்கள் நம்பவில்லை. தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிய தயாராகி விட்டனர். அடுத்து பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.
தி.மு.க., விற்கு ஒரு சாபக்கேடு உள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. கொட்டிக் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு சண்முகம் பேசினார்.