போதையில் மாமியாரை கொலை செய்தவர் கைது
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் பகுதியைச் சேர்ந்தவர் மேரி 55. இவரது மகள் தேன்மொழி. இவர் கன்னியாகுமாரி குளச்சல் பகுதியைச் சேர்ந்த அசோக் 35 என்பவரை திருமணம் செய்து, வாழவயலில் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதே வீட்டில் தேன்மொழியின் சகோதரர்கள் சுதாகர் மற்றும் அஜித்குமார் ஆகி யோரும் குடியிருந்து வருகின்றனர்.
அசோக் கட்டிட வேலைக்கு செல்வதுடன், போதை பழக்கம் உள்ளவர். இவர் தினசரி போதையுடன் வீட்டிற்கு வரும் நிலையில், மனைவி தேன்மொழியுடன் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், தேன்மொழி கோழிப்பாலம் பகுதியில் உள்ள, தனது உறவினர் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்றுள்ளார்.
21ஆம் தேதி இரவு, போதையுடன் வீட்டிற்கு வந்த அசோக் தனது மனைவி குறித்து விசாரித்ததுடன், உணவு எடுத்து வைக்குமாறு மாமியாரிடம் கூறியுள்ளார். இதனால் மாமியார் மேரி மற்றும் மைத்துனர் சுதாகர் ஆகியோர் அசோக்கை திட்டி உள்ளனர்.
அதில் ஆத்திரமடைந்த அசோக் அருகில் இருந்த கத்தியை எடுத்து, சுதாகரை தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். அதனை மேரி தடுக்க முயன்ற போது, அவர் தலையிலும் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிலும் ஆத்திரம் தீராமல் மீண்டும் சுதாகரின் உடலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர் வீட்டில் இருந்து ஓடி வந்த, சுதாகரின் தம்பி அஜித் குமாரின் கை மற்றும் முதுகு பகுதியில் வெட்டியுள்ளார். உடனே அருகில் இருந்த இளைஞர்கள் வந்து, அசோக்கிடமிருந்து கத்தியை பிடுங்கி அவரை மடக்கி பிடித்தனர்.
பலத்த காயமடைந்த சுதாகர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். லேசான காயங்களுடன் தப்பிய அஜித்குமார் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அசோக் தேவாலா போலீஸ் சரண் அடைந்தார்.
உயிரிழந்த மேரியின் உடல் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தேவாலா டி.எஸ்.பி. கல்யாணகுமார் விசாரணை மேற்கொண்டு, அசோக்கை கைது செய்தார்.
போதையில் ஏற்பட்ட கோபத்தில் மாமியார் மற்றும் மைத்துனர்களை வெட்டி சாய்த்த சம்பவம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
திருப்பதி லட்டு தயாரிப்பை பரிசோதிக்க ரூ.3.350 கோடியில் பிரான்ஸ் இயந்திரம் இறக்குமதி
-
பிரிட்டன் விருதை வென்றது இந்திய திரைப்படம்
-
ஆப்ரிக்காவிலிருந்து மேலும் வரும் 8 சிவிங்கிபுலிகள்: 46 ஆக உயரும் சிவிங்கிபுலிகள் எண்ணிக்கை
-
மார்ச் 10ல் தமிழகம் வருகிறது மத்திய படை
-
ஜே.என்.யு., பல்கலையில் மாணவர்கள் வன்முறை; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
-
தன்னம்பிக்கையின் துருவ நட்சத்திரம் லுாபா