தோனி சந்தேகம்: பிரிமியர் தொடரில் பங்கேற்பதில்

ஆமதாபாத்: பிரிமியர் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணியின் தோனி பங்கேற்பது சந்தேகம்.

பிரிமியர் தொடரின் 19வது சீசன், அடுத்த மாதம் துவங்கவுள்ளது. சென்னை அணியில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி 44, இடம் பெற்றுள்ளார். இவரது தலைமையிலான சென்னை அணி 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு நடந்த 18வது சீசனின் துவக்கத்தில் சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். பின், ருதுராஜ் காயத்தால் வெளியேற தோனி மீண்டும் அணியை வழிநடத்தினார்.
சமீபத்தில், 19வது சீசனுக்கு கேப்டனாக ருதுராஜ் தொடர்வார் என்றும், விக்கெட் கீப்பராக தோனி களமிறங்குவது குறித்து பயிற்சியாளர் முடிவு செய்வார் என சென்னை அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணியின் அதிகாரி ஒருவர் வெளியிட்ட செய்தியில், '19வது சீசனில் சென்னை அணிக்காக தோனி நிச்சயம் விளையாடுவார். ஆனால் அனைத்து போட்டிகளிலும் களமிறங்குவாரா என்பதை தற்போது உறுதிப்படுத்த முடியாது,' என, தெரிவித்திருந்தார்.

Advertisement