இங்கிலாந்து அசத்தல் வெற்றி: 95 ரன்னுக்கு சுருண்டது இலங்கை
பல்லேகெலே: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ஏமாற்றிய இலங்கை அணி 95 ரன்னுக்கு சுருண்டது.
இலங்கையின் பல்லேகெலேயில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு-2) இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
சால்ட் அரைசதம்: இங்கிலாந்து அணிக்கு பட்லர் (7), ஜேக்கப் பெத்தெல் (3), டாம் பான்டன் (6) ஏமாற்றினர். கேப்டன் ஹாரி புரூக் (14), சாம் கர்ரான் (11) நிலைக்கவில்லை. துனித் வெல்லாலகே பந்தை சிக்சருக்கு அனுப்பிய பில் சால்ட், தில்ஷன் மதுஷங்கா வீசிய 5வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டினார். தனிநபராக அசத்திய சால்ட், 36 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 62 ரன்னில் (2X6, 6X4) ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் (21) ஓரளவு கைகொடுத்தார்.
இங்கிலாந்து அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது. ஜேமி ஓவர்டன் (10), அடில் ரஷித் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் துனித் வெல்லாலகே 3, தில்ஷன் மதுஷங்கா, மகேஷ் தீக் ஷனா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஜாக்ஸ் அசத்தல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணி துவக்கத்திலேயே தடுமாறியது. ஜோப்ரா ஆர்ச்சர் 'வேகத்தில்' பதும் நிசங்கா (9), கமில் மிஷாரா (6) வெளியேறினர். வில் ஜாக்ஸ் 'சுழலில்' குசால் மெண்டிஸ் (4), பவன் ரத்னாயகே (0), துனித் வெல்லாலகே (10) சிக்கினர். கமிந்து மெண்டிஸ் (13) நிலைக்கவில்லை. கேப்டன் தசுன் ஷனகா (30) மட்டும் ஆறுதல் தந்தார். அடுத்து வந்த துஷன் ஹேமந்தா (5), துஷ்மந்தா சமீரா (6), தில்ஷன் மதுஷங்கா (0) ஏமாற்றினர்.
இலங்கை அணி 16.4 ஓவரில் 95 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. தீக் ஷனா (10) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் வில் ஜாக்ஸ் 3, ஆர்ச்சர், டாசன், அடில் ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இது, 'டி-20' அரங்கில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக பெற்ற 12வது வெற்றி. ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் வென்றார்.
மூன்றாவது குறைந்தபட்சம்
இலங்கை அணி, 'டி-20' உலக கோப்பை அரங்கில் தனது 3வது குறைந்தபட்ச ஸ்கோரை (95/10) பதிவு செய்தது. ஏற்கனவே 77 (எதிர்: தெ.ஆப்., 2024, நியூயார்க்), 87 (எதிர்: ஆஸி., 2010, பிரிட்ஜ்டவுன்) ரன்னில் சுருண்டது.
மேலும்
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு
-
ஜனாதிபதி மாளிகையில் லுட்யன்ஸ் சிலைக்கு பதிலாக ராஜாஜி சிலை!
-
மெக்சிகோவில் வெடித்தது வன்முறை; இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
-
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 23)!
-
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 17 பேர் பலியான சோகம்
-
இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது; கமல்