இந்தியா 'ஏ' மீண்டும் சாம்பியன்: 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பையில்

பாங்காக்: 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பையில் இந்தியா 'ஏ' அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 46 ரன் வித்தியாசத்தில் வங்கதேச 'ஏ' அணியை வீழ்த்தியது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், வளர்ந்து வரும் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் நடந்தது. இதன் பைனலில் இந்தியா 'ஏ', வங்கதேசம் 'ஏ' அணிகள் மீண்டும் மோதின.
தேஜல் அரைசதம்: 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்தியா 'ஏ' அணிக்கு விரிந்தா (19) சுமாரான துவக்கம் தந்தார். நந்தினி (8), அனுஷ்கா சர்மா (8), மின்னு மணி (0) சோபிக்கவில்லை. இந்திய அணி 44/4 ரன்னுக்கு தடுமாறியது. பின் இணைந்த தேஜல் ஹசாப்னிஸ், கேப்டன் ராதா யாதவ் ஜோடி கைகொடுத்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்த போது ராதா (36) அவுட்டானார். தனுஜா கன்வர் (1), பிரேமா ரவாத் (4) ஏமாற்றினர். தேஜல் அரைசதம் கடந்தார்.


இந்தியா 'ஏ' அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. தேஜல் (51 ரன், 2X6, 3X4), மமதா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

பிரேமா அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச 'ஏ' அணிக்கு ஷமிமா சுல்தானா (20), சர்மின் சுல்தானா (18), கேப்டன் பஹிமா காதுன் (14) ஆறுதல் தந்தனர். வங்கதேச 'ஏ' அணி 19.1 ஓவரில் 88 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா 'ஏ' அணி சார்பில் பிரேமா ரவாத் 3, சோனியா, தனுஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகி விருதை தேஜல் வென்றார். இந்தியா 'ஏ' அணி தொடர்ந்து 2வது முறையாக (2023, 2026) சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement