துாய்மைப் பணியாளர்கள் போராட்டம் எம்.பி., பேச்சுவார்த்தையால் உடன்பாடு

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் குப்பைகளை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக குப்பை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

இதில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களது சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்டு இ.எஸ்.ஐ., மற்றும் வை ப்பு நிதிகளை நிலுவை இல்லாமல் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் வரை 4 நாட்களாக நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகர் முழுவதும் குப்பைகள் வாரப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரவிக்குமார் எம்.பி., ஒப்பந்ததாரிடம், ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தவும், வைப்பு நிதி நிலுவையில்லாமல் செலுத்துவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

இது குறித்து போராட்டம் நடத்திய துாய்மைப் பணியாளர்களிடம் ரவிக்குமார் எம்.பி., விளக்கி கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட ஒப்பந்த துாய்மைப் பணியாளர்கள் நேற்று 20ம் தேதி முதல் பணிக்கு திரும்பினர்.

பேச்சுவார்த்தையின் போது நகராட்சி கமிஷனர் பாலமுருகன், நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி உடனிருந்தனர்.

Advertisement