தன்னம்பிக்கையின் துருவ நட்சத்திரம் லுாபா


"வாழ்க்கை நமக்கு என்ன தருகிறது என்பது முக்கியமல்ல, அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம்" - இந்த வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர் லுபா காண்டர்(29). பிறப்பிலேயே இடது கை இல்லாமல் பிறந்த லுபா, இன்று உலகப் புகழ்பெற்ற 'போல் டான்சர்'.போல் டான்ஸ் என்றால் செங்குத்தான உலோக கம்பத்தில் ஏறி நிகழ்த்தும் சாகச விளையாட்டாகும், கிட்டத்தட்ட நம்மூர் 'மல்லர் கம்பம்' போன்ற வீர விளயைாட்டு போன்றது. இவர் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் வசித்து வருகிறார்.
Latest Tamil News
லுபா ஒரு கையுடன் பிறந்தபோது, சமூகம் அவரைப் பரிதாபமாகப் பார்த்தது. ஆனால், அவரது பெற்றோரும் லுபாவும் அந்தப் பரிதாபத்தை ஒருபோதும் ஏற்கவில்லை. மற்ற குழந்தைகளைப் போலவே அனைத்து வேலைகளையும் செய்யப் பழகிய லுபாவுக்கு, விளையாட்டு மற்றும் நடனம் மீது அதீத ஆர்வம் இருந்தது. எதையும் ஒரு கையால் செய்யப் பழகிய அவருக்கு, ஈர்ப்பு விசைக்கு எதிராக அந்தப் கம்பத்தைப் பிடித்து ஏறுவது ஒரு பெரிய சவாலாகத் தோன்றவில்லை, மாறாக ஒரு சாகசமாகத் தோன்றியது.
Latest Tamil News
போல் டான்சிங் என்பது இரு கைகளுமே வலிமையாக இருந்தால்தான் சாத்தியம் என்று கருதப்பட்ட கலை. ஆனால், லுபா தனது ஒற்றைக் கையில் அபாரமான தசை வலிமையை வளர்த்துக்கொண்டார். இரு கைகள் செய்ய வேண்டிய வேலையைத் தனது ஒற்றைக் கையும், கால்களும் ஒருங்கிணைந்து செய்யுமாறு தனது உடலைப் பழக்கப்படுத்தினார். கம்பத்தின் மேல் சுழலும்போது ஏற்படும் ஈர்ப்பு விசை அழுத்தத்தை ஒரு கையால் தாங்குவது சாத்தியமற்றது எனப் பலர் கூறினர். ஆனால், பல மாதப் பயிற்சியால் சாத்தியமாக்கினார்.

டெல் அவிவ் நகரில் அவர் பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியபோது உலகம் அவரை உற்று நோக்கியது.அவர் சாதாரணமானவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.ஊனமுற்றோருக்கான முன்மாதிரியாகத் திகழும் அவர், "உடல் குறைபாடு என்பது ஒரு தடையல்ல, அது ஒரு தனித்துவம்" என்பதை உலகிற்கு உணர்த்தினார்.பல சர்வதேச மேடைகளில் அவர் ஆடிய ஆட்டம், பார்வையாளர்களை எழுந்து நின்று கைதட்ட வைத்தது.

லுபா தனது புன்னகையின் மூலம் உலகிற்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான்: "தடைகளைக் கண்டு புன்னகைக்கப் பழகுங்கள்." இன்று அவர் ஒரு கலைஞர் மட்டுமல்ல, பலருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் ஒரு சிறந்த பயிற்சியாளராகவும் விளங்குகிறார்.

-எல்.முருகராஜ்

Advertisement