காப்பி பேஸ்ட் செய்வது தி.மு.க., தான் கே.பி.முனுசாமி பேட்டி

விருதுநகர்: ''தேர்தல் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்வது தி.மு.க., தான்,'' என விருதுநகரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரி வித்தார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் மிகப்பெரிய சிரமத்தை எதிர்கொண்டதால் தான் முதல்வர் ஸ்டாலினுக்கும், தனக்கும் போட்டி என த.வெ.க., தலைவர் விஜய் பேசுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் சினிமா துறையில் பிரச்னை வந்த போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தீர்வு கண்டார். இதனால் விஜய் அ.தி.மு.க., ஆட்சிக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இருந்தார். அ.தி.மு.க., ஆட்சியில் விஜய் அரசியல் பற்றி சிந்தித்து பார்க்கவே இல்லை.

அ.தி.மு.க., அரசு இருந்தபோது சினிமா தொழில் பாதுகாப்பானதாக இருப்பதாக விஜய் உணர்ந்தார். பழனிசாமி ஆட்சியிலும் சினிமா துறை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் துணை முதல்வர் உதயநிதி, விஜய் படத்திற்கு பல்வேறு இடையூறுகளை அளித்தார். இதனால் கோபமடைந்த விஜய், த.வெ.க., - தி.மு.க., இடையே தான் போட்டி என கூறுகிறார்.

கோபம் கூடிவிட்டதால் தனக்கும், ஸ்டாலினுக்கும் தான் சண்டை என பேசி வருகிறார். ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்ற சிந்தனை விஜய்க்கு இல்லை. ஸ்டாலினை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளார்.

தி.மு.க.,விற்கு மாற்று அ.தி.மு.க., தான். தேர்தல் அறிக்கையை 'காப்பி பேஸ்ட்' செய்வது அ.தி.மு.க.,விற்கு கைவந்த கலை என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அனைத்தையும் 'காப்பி பேஸ்ட்' செய்வது தி.மு.க., தான். 'ஜெராக்ஸ்' எடுப்பதற்கு பெயர் போனவர் ஸ்டாலின் என்றார்.

Advertisement