திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகிறார்: பா.ஜ., ராம சீனிவாசன் பேச்சு

19

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றக்கோரி திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள், பூர்வ குடியினர் விளக்கேற்றி அரோகரா கோஷங்களுடன் கந்த சஷ்டி கவசம் பாடினர்.

பழநி ஆண்டவர் கோயில் முன்பு அப்பகுதியினர் 'தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என வாசகங்கள் எழுதி கலர் கோலமிட்டு, முருகப்பெருமான் படம் வைத்து நுாற்றுக்கு மேற்பட்ட விளக்குகள் ஏற்றினர்.

பின்பு கோயில் முன் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், பொதுமக்கள், பூர்வீக குடியினருடன் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினார். பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு உட்பட திருப்பரங்குன்றத்தில் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி சஷ்டி கவசம் பாடினர்.

பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மண்டல் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

16 கால் மண்டபம் முன்பு ஹிந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் கேசவன், பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் பிரசாந்த், கோட்ட செயலாளர் அரசு பாண்டி, பொதுமக்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாடினர்.

பின்பு ராம சீனிவாசன் பேசியதாவது: இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை தீப துாணில் ஏற்ற வேண்டும் என முயற்சி செய்தும், நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு ஏற்றவிடவில்லை.

நம்ம மலை, நம்ம முருகன், நம்ம கோயில், நம்ம தீபம். ஆனால் நாம் தீபம் ஏற்ற முடியவில்லை. முருகப்பெருமான் எதிரிகளை அழிப்பவர். தீபம் ஏற்றவிடாமல் எதிர்ப்பவர்களை அழிப்பார். தீபம் ஏற்றுபவர்களை எதிர்ப்பவர்களுக்கு முருகப்பெருமான் நல்ல புத்தி கொடுப்பார். தீபத்தை ஏற்றாமல் தடுப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் முருகனுக்கு உகந்த கார்த்திகை சஷ்டி திதி நாளான இன்று சஷ்டி கவசம் பாடுகிறோம். தீபம் ஏற்றுவதற்காக முருகப்பெருமான் காலை பிடித்துக் கொள்வோம். தீபம் ஏற்ற வலியுறுத்துவோம். தீபம் ஏற்றுவதற்கு பிரார்த்தனை ஒன்றுதான் தீர்வு.

போதைப் பொருள் கடத்துபவர்கள், கஞ்சா விற்பவர்களை போலீசார் சுதந்திரமாக நடமாட விடுகின்றனர். ஆனால் தீபம் ஏற்றுபவர்களை கைது செய்கின்றனர். அனைத்தையும் முருகப்பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார். சத்தியத்தின் வழியில் நாம் செல்கிறோம். தீபம் ஏற்ற வலியுறுத்தி இப்பகுதி பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றீர்கள். உங்களுக்கு பாராட்டுக்கள்.

மார்ச் 1ல் மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார் என்றார்.

Advertisement