247 முறை வெளிநாடு பயணம், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு; ராகுல் மீது பாய்ந்த மத்திய அமைச்சர்

6

புதுடில்லி: ராகுல் 247 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அவ்வாறு செல்லும் போது எல்லாம், இந்தியாவையும்,இந்தியர்களையும் ஏளனம் செய்கிறார், எத்தகைய தேச விரோத சக்திகளுடன் தொடர்புகள் உள்ளன என்பதை அனைவரும் அறிவார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.

டில்லியில் அவர் அளித்த பேட்டி;

நாட்டின் பல்வேறு பிரச்னைகளில் சோனியா மட்டுமல்ல, ராகுல் ஏன் ராஜிவும் சமரசம் செய்து கொண்டிருக்கிறார். ராஜிவ் உத்தரவின் பேரில் வெளியுறவு அதிகாரிகள் போபர்ஸ் ஊழல் விசாரணையை நிறுத்த முயன்றது எப்படி என்பது எல்லாருக்கும் தெரியும். நண்பர் ஒட்டாவியோ குட்ரோச்சியை காப்பாற்ற நேர்மையாக நடத்தப்பட்ட விசாரணை எவ்வாறு தடுக்கப்பட்டது என்று அனைவரும் அறிவர். இவர்கள் உலகின் முன் நாட்டை எப்படி களங்கப்படுத்தி சமரசம் செய்து கொண்டனர் என்பது தெரியும்.

மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் கூட ராகுல், சோனியா இருவரும் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை நீங்கள் கண்டீர்கள். சில சமயங்களில், நிருபர்கள் முன்னிலையில் அமைச்சரவை முடிவுகளைக் கூட அவர்கள் கிழித்து எறிந்தனர். சோனியா ராகுல் இருவரும் இணையான அமைச்சரவையை நடத்தி நாட்டை சமரசம் செய்து கொண்டனர்.

ராகுல், வெளிநாட்டு சக்திகள், நாட்டுக்கு எதிரான அமைப்புகளின் கைப்பாவை மட்டுமே. அவர்களின் சமரசத்தை பார்லி. வெளியில் நடைபெறும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்டிருக்கிறோம்.

பாஜ ஆதரவு பத்திரிகையாளர் என்று ஒருவர் முத்திரை குத்தப்பட்டால் ராகுலிடம் எந்த ஒரு கேள்வியையும் கேட்க முடியாது. முன் கூட்டியே எழுத்துப் பூர்வமாக அளிக்கப்பட்டு, நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பார். வேறு கேள்விகளை எதிர்கொள்ள முடியாது. அப்படிப்பட்டவர் காங்கிரசை வழிநடத்தி, நாட்டுடன் விளையாடுகிறார். பிரதமர் மோடி புகழ், புதிய மற்றும் வளர்ந்து வரும் இந்தியா ஆகியவற்றை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய்களுக்கு மேல் பொய்களைச் சொல்லி வருகின்றனர்.

ராகுல் 247 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை புறம்தள்ளுகிறார். அவருக்கு எத்தகைய தேச விராத சக்திகளுடன் தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பு கொண்ட நபர்களுடனும் எவ்வாறு சமரசம் செய்கிறார் என்பதை நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம்.

ராஜிவ் குடும்பம் முற்றிலும் சமரசம் செய்யப்பட்ட அரசியல் குடும்பம். ராகுல் என்றால் சமரசம் என்று பொருள். அவர் எதிர்மறை அரசியலின் முன்னோடியாக மாறிவிட்டார்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

Advertisement