ஓடோடம் வயல் பழங்குடியின கிராமத்தில் சிறப்பு முகாம்; பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் உறுதி

பந்தலுார்: பந்தலுார் அருகே, ஓடோடம் வயல் பழங் குடியின கிராமத்தில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில், வி.ஏ.ஓ., செபீர் வரவேற்றார். தாசில்தார் சிராஜு நிஷா தலைமை வகித்தார்.

சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜா பங்கேற்று பேசுகையில், ''பழங்குடியின மக்கள் அனைத்து, வழிகளிலும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில், அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிகாரிகள் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை தீர்ப்பதற்காக இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

''அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள், பழங்குடியினர் கிராமங்களில் வந்து வசதிகள் செய்து தருவதாகவோ, அரசு நிர்வாகத்திற்கு எதிராக பேசி உணவுப்பொருட்களை வாங்கி செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், அது குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை, தினசரி பள்ளிக்கு அனுப்புவது மற்றும், நல்ல நிலையில் படிக்க வைப்பது போன்றவை மூலம் சமுதாயத்தை மேம்படுத்த இயலும்,'' என்றார்.

தொடர்ந்து, கிராம மக்கள் தங்கள் குறைகள் குறித்து தெரிவித்தனர். அதில், 'குடிநீர் வசதி, பழைய தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரவேண்டும், நடைபாதை வசதி மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும், புதிதாக கட்டும் தொகுப்பு வீடுகளை நல்ல நிலையில் கட்டித்தர வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.

குடிநீர் வசதியை உடனடியாக ஏற்படுத்தி தர, ஊராட்சி நிர்வாகத்திடமும், தெருவிளக்கு மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி தர மின்வாரிய அதிகாரிகளிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம் அறிவுறுத்தினார். அடிப்படை வசதிகள் தேவை குறித்து, 40 மனுக்கள் பழங்குடியின மக்களிடம் பெறப்பட்டது.

முகாமில் தலைமையிட துணை தாசில்தார் பொன்னரசு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சந்திரசீலன், வருவாய் ஆய்வாளர் சிவகுமார், வனக்காப்பளர் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள், பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.

Advertisement