நீலகிரியில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு: விற்பனை சந்தையை விரிவுபடுத்துவது அவசியம்

குன்னுார்: 'நீலகிரியில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கப்படும் நிலையில், விற்னை சந்தையை விரிவுபடுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை விவசாயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிப்பு அளித்து வருகின்றன. மாவட்டத்தில், 4000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் இந்த இயற்கை விவசாயத்தில், 10 ஆயிரம் சிறு விவசாயிகள் களம் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் 'ஸ்கோர் சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாய பரப்பை விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரூ.50 கோடியில் திட்டம் நடப்பாண்டில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, 50 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு. அடுத்த ஐந்து ஆண்டு களுக்கு செயல் படுத்தப்பட உள்ளது. மலை காய்கறிகளான, 'கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர் மட்டுமின்றி பீச், பேரி, ஸ்ட்ராபெரி,' உள்ளிட்ட பழ வகைகளும் இயற்கை முறையில் விளைவிக்கப் படுகிறது.

ராகி, சாமை போன்ற சிறுதானியங்களும் பழங்குடியின மக்களால் பயிரிடப்படுகிறது.

மேலும், ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலை மையம், ஊட்டி உழவர் சந்தையில் உள்ள தனி பிரிவு, சிம்ஸ்பூங்கா தோட்டக்கலை மையங்களில், காய்கறிகள் சந்தைபடுத்தப்பட்டு,விற்பனை செய்யப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கேரட் விலை கிலோ, 25 ரூபாய் என இருந்தால், இயற்கை விவசாய கேரட், 35 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள் ஐரோப்பா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்கின்றன.

இந்நிலையில், இயற்கை விவசாய காய்கறிகளின் சந்தையை விரிவுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குன்னுார் இளித்தொரை கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், ''பெர்டிலைசர் உள்ளிட்ட உரங்கள் பயன் படுத்தி தோட்டத்தில் விளைவிக்கும் கேரட் உள்ளிட்ட மலை காய்கறிகள், 10 மூட்டைகள் கிடைக்கும் இடத்தில், இயற்கை முறையிலான விவசாயத்தில், 5 மூட்டைகள் மட்டுமே கிடைக்கும்.

எனினும், பல்லாயிரம் விவசாயிகள் இதில் ஆர்வத்துடன் களம் இறங்கி உள்ளனர். இதனை ஊக்குவிப்பதுடன், நீலகிரி மற்றும் சமவெளி பகுதிகளில், இதன் சந்தையை விரிவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement