ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் வெள்ளி வென்றவருக்கு பாராட்டு

குன்னுார்: டில்லியில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற குன்னுார் இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

டில்லியில், கடந்த, 21, 22 தேதிகளில், உலக ராபவர் லிப்டிங் கூட்டமைப்பு மற்றும் உலக ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு சார்பில், ஆசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

அதில், இந்தியா, இலங்கை, நேபாளம் உட்பட, 6 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து பல்வேறு பிரிவுகளில், 37 வீரர்கள் பங்கேற்றத்தில் 24 பேர் வெற்றி பெற்றனர்.

அதில், குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியை சேர்ந்த ரவி -லதா ராணி தம்பதியின் மூத்த மகன் பரத், 30, இப்போட்டியில் சீனியர் (ஓபன்) 52 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். 82.5 கிலோ எடையை துாக்கி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இப்போட்டியில், முதலிடத்தை இலங்கையும். மூன்றாம் இடத்தை நேபாளமும் பிடித்தன. அவருக்கு குன்னுாரில் உள்ள விளையாட்டு வீரர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரித்தனர்.

கோவை ஐ.டி., கம்பெனியில் பணியாற்றி வரும் பரத் கூறுகையில்,''பயிற்சியாளர் யாரும் இல்லாமல், ஜிம் சென்று தீவிர பயிற்சி எடுத்து, பதக்கம் வென்றேன். மாஸ்டர் லெவல் பிரிவில் தங்கம் வென்ற திருப்பூர் தலைமை காவலர் கார்த்திக், பெரும் உறுதுணையாக இருந்தார். வியட்நாமில் ஆக., மாதம் நடக்கும் உலக போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளேன்,''என்றார்.

Advertisement