திடக்கழிவு மேலாண்மை விதிகள் ஏப்., 1 முதல் அமல்படுத்த உத்தரவு விதியை மீறும் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை

நாட்டில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை, ஏப்., 1 முதல் கண்டிப்புடன் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இரண்டு வழக்குகள் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், எஸ்.வி.என்.பாத்தி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் என, நான்கு வகைகளாக பிரித்து சேகரிக்க வேண்டும்.

இதற்கேற்ப வாகனங்களை உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்த வேண்டும்.

மேயர்கள், கவுன்சிலர்கள் குப்பை தரம் பிரிப்பதை உறுதி செய்யும் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட வேண்டும். மாவட்ட கலெக்டர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை தலைமை செயலருக்கு வழங்க வேண்டும்.

கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்காமல், குற்றவியல் விசாரணை மற்றும் சிறை தண்டனை விதிக்க வேண்டும்.

பள்ளி பாடத்திட்டத்திலும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை சேர்க்க வேண்டும். சிறப்பாக செயல்படும் மாநகராட்சிகளை மத்திய அரசு தரவரிசைப்படுத்தி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

அனைத்து கழிவு மேலாண்மை உட்கட்டமைப்புகளும், மார்ச் 31-க்குள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏப்., 1 முதல், திடக்கழிவு மேலாண்மை விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- டில்லி சிறப்பு நிருபர் -:

Advertisement