நவ கேரள குடிமக்கள் பதிலளிப்பு திட்டம் ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

கேரளாவில், அரசு சார்பில், 'நவ கேரள குடிமக்கள் பதிலளிப்பு திட்டம்' என்ற பெயரில், மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு திட்டத்தை ரத்து செய்த, அம்மாநில உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 140 சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் தமிழகத்துடன் சேர்த்து தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, 'நவ கேரள குடிமக்கள் பதிலளிப்பு' என்ற திட்டத்தை, கடந்த ஜன., 1ல் கேரள அரசு துவங்கியது.

வரும் 28 வரை, வீடு வீடாகச் சென்று மக்களின் குறைகள், தேவைகள், மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் குறித்து கேட்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்துக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கி கேரள அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழகத்தில் ஆளும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, இதே பாணியில், 'உங்க கனவை சொல்லுங்க' என்ற பெயரில் மக்களிடையே கருத்துகளை கேட்டு வருகிறது.

கேரள அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 18ல் விசாரித்த உயர் நீதிமன்றம், 'இத்திட்டம், நிர்வாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய செயல். அரசு பணம் தவறாக பயன்படுத்தப்படுகிறது' எனக்கூறி, இத்திட்டத்தையும், இதற்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கி வெளியிடப்பட்ட அரசாணையையும் ரத்து செய்தது.

இதை எதிர்த்து கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அரசின் நலத்திட்டங்கள், அடிமட்ட அளவில் மக்களை சென்றடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய, அரசு ஊழியர்களின் உதவியை பெறுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

எனவே, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து பதிலளிக்கும்படி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் படுகிறது.

இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

- டில்லி சிறப்பு நிருபர் -:

Advertisement