நாய் கடித்து மின் ஊழியர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 51; மின்வாரிய ஊழியர். இவரது வீட்டு நாய் குட்டி, 2025, அக்டோபரில், இவரை கடித்தது. 10 நாட்கள் கழித்து, நாய் குட்டி இறந்து விட்டது. இதை பொருட்படுத்தாத அவர், தடுப்பூசி போடவில்லை.

பின், உடல்நிலையில் மாற்றம் ஏற்படவே, திருமயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு, ரேபிஸ் நோய்க்கான அறிகுறி கண்டறியப்பட்டதும், மருத்துவர்கள், அவரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

திருச்சி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

மருத்துவர்கள் கூறுகையில், 'நாய் கடித்தவுடன், அருகிலுள்ள அரசு மருத்துவமனை சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டு, மருத்துவர் ஆலோசனைப்படி நடந்து கொள்வதன் மூலம், ரேபிஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்' என்றனர்.

Advertisement