கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த வாயிற் முழக்க போராட்டத்திற்கு கவுரவ விரிவுரையாளர் சந்திரலேகா தலைமை தாங்கினார். மே மாதம் உட்பட 12 மாதங்களுக்கு யு.ஜி.சி., நிர்ணயித்த ஊதியம் ரூ.57,700 வழங்குதல், பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குதல், பி.எப்., மற்றும் இ.பி.எப்., உள்ளிட்ட அரசு சலுகைகள் வழங்குதல், ஓய்வு பெறும் போது பணிக்கொடை வழங்குதல் மற்றும் பணியின்போது இறந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு நிவாரண தொகை வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ம் தேதியில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் கல்லுாரி நுழைவு வாயில் பகுதியில் பதாகைகளை ஏந்தி, போராட்டம் செய்தனர். இதில், கவுரவ விரிவுரையாளர்கள் ரமணி, ஜெகநாதன், முகேஷ்பிள்ளை, குணசேகரன், கரிமுன்னிசா, முருகசாமி, முருகப்பிள்ளை, பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement