வடகிழக்கு மாநில பெண்களை அவதூறாக பேசிய தம்பதி சிறையில் அடைப்பு; இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு கடும் கண்டனம்
புதுடில்லி: வாடகை வீட்டில் தங்கியிருந்த வடகிழக்கு மாநில இளம்பெண்களை அவதூறாக பேசிய தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தெற்கு டில்லி மாளவியா நகரில் வசிப்பவர் ஹர்ஷ் பிரியா சிங். அவரது மனைவி ரூபி ஜெயின். பக்கத்து வீட்டில் வடகிழக்கு மாநிலம் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் வசித்தனர். கடந்த, 20ம் தேதி தம்பதிக்கும் இளம்பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜாதி ரீதியாகவும், அவதூறாகவும் இளம்பெண்களை தம்பதி விமர்சித்துள்ளனர்.
இதையடுத்து, மாளவியா நகர் போலீசில் இளம்பெண்கள் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஹர்ஷ் - ரூபி தம்பதியை கைது செய்தனர்.
மாஜிஸ்திரேட் பானு பிரதாப் சிங் முன் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், மார்ச் 11ம் தேதி நீதிமன்றக் காவலில் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரேகா குப்தா கண்டனம்
இதற்கிடையில், டில்லி முதல்வர் ரேகா குப்தா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எங்கள் சகோதரிகளுக்கு நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களுக்கு பாதுகாப்பாக என்றும் இருப்பேன். தலைநகர் டில்லி நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது.
ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பு டில்லியில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட அருணாசல பிரதேச சகோதரிகளை விரைவில் சந்திப்பேன். டில்லி மாநகரப் போலீஸ் முழு பொறுப்புடன் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. யாரையும் துன்புறுத்துவது, பாகுபாடு காட்டுவது அல்லது அவமானப்படுத்துவதை டில்லி அரசு பொறுத்துக்கொள்ளாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்வர்கள் கண்டனம்
டில்லியில் அருணாச்சலப் பிரதேச பெண்கள் மீதான இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் முதல்வர் பெமா காண்டு, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மேலும்
-
அனில் அம்பானியின் ரூ.3716 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
-
சைவம், வைணவம் குறித்து ஆபாச பேச்சு; மார்ச் 24ல் பொன்முடி ஆஜராக உத்தரவு
-
பிரேசில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி
-
அமெரிக்காவில் இனி சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்காது!
-
எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்: பாகிஸ்தான் ஐகோர்ட்டில் 5 ஆண்டாக பணியாற்றிய போலி நீதிபதி நீக்கம்
-
கேரளா ரயில்வே ஸ்டேஷனில் பெண் அமைச்சர் மீது தாக்குதல்; இளைஞர் காங். அத்துமீறல்