6000 டன் நெல்:அரசு நேரடி கொள்முதல் மையங்களில் பெறப்பட்டது:வியாபாரிகளிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடக்கும் நிலையில் 90 நேரடி கொள்முதல் மையங்கள் மூலம் 6000 டன் நெல் பெறப்பட்டுள்ளது. அரசு மையத்தில் விற்றால் வறட்சி, மழை நிவாரணம் கிடைக்காது என பொய் கூறும் தரகர்கள், வியாபாரிகளிடம் விவசாயிகள் ஏமாற வேண்டாம் என வேளாண்மை துறை, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் எச்சரித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக கண்மாய் பாசனத்தில் 33 லட்சம் ஏக்கரில் ஆண்டு தோறும் நெல் சாகுபடி நடக்கிறது. 2025- 2026 நடப்பாண்டில் தற்போது நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடை பணிகள் நடக்கிறது. அரசு கொள்முதல் நிலையங்களை முன்கூட்டியே திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு சங்கங்கள் என 90 நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மையங்களில் சன்னரக நெல் கிலோவிற்கு ரூ.25.45 வீதம், குண்டு ரக நெல் ரூ.25க்கும் கொள்முதல் செய்கின்றனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்றால் உங்களுக்கு வறட்சி, மழை நிவாரணம், காப்பீட்டுத் தொகை பெறும் போது சிக்கல் ஏற்படும் எனக்கூறி விவசாயிகளை ஏமாற்றி சில புரோக்கர்கள், வியாபாரிகள் அவர்களது வயலுக்கே சென்று குறைந்த விலைக்கு நெல் கொள் முதல் செய்கின்றனர்.

ராமநாதபுரம் நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், எங்களது 64 மையங்களில் 10 நாட்களில் 6000 டன் வரை நெல் கொள்முதல் செய்துள்ளோம். அனைத்து தாலுகாவிலும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு 24, கூட்டுறவுத்துறை 2 என 90 மையங்கள் செயல்படுகிறது.

கடலாடி, கமுதியில் வறட்சி நிவாரணம் கிடைக்காது. இங்கு கொள்முதல் மையத்தை திறக்க கூடாது என விவசாயிகள் கூறுகின்றனர். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கும் மழை, வறட்சி நிவராணம், பயிர் காப்பீடு பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாண்டு சாக்கு பற்றாக்குறை இல்லை. நெல் விற்கும் விவசாயிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. சிக்கல் பகுதியில் சிலர் தங்கள் பகுதி நெல்லை மட்டுமே வாங்க வேண்டும் என பிரச்னை செய்கின்றனர். பக்கத்து ஊர் விவசாயிகள் வரக்கூடாது எனவும் கூறி அவர்களை வியாபாரிகள் என புகார் கூறுகின்றனர்.

இதில் வியாபாரிகள் தலையீடு கிடையாது. விவசாயிகளிடம் மூவிதழ் சான்று நகல் வாங்கி அதனை ஆன்-லைனில் வி.ஏ.ஒ.,விற்கு அனுப்பி அவரது சான்று பெற்று பிறகு தான், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றனர்.

Advertisement