சிறுதானிய திருவிழாவில் 174 விவசாயிகளுக்கு உதவி

பெத்தநாயக்கன்பாளையம்: தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் சார்பில், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த வைத்தியகவுண்டன்புதுாரில், மாவட்ட அளவில் சிறுதானிய திருவிழா நேற்று நடந்தது. அதில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி, கருத்துக்காட்சி அரங்கினை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.


தொடர்ந்து அவர் கூறியதாவது:

இந்த விழாவில் விவசாயிகள் பயன்பாட்டுக்கு சிறுதானிய சாகுபடி குறித்த தொழில்நுட்ப கையேடு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு, 25 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி, முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க, 1.82 கோடி ரூபாய் மானியம், சொட்டு நீர் பாசனம், மதிப்பு கூட்டுதல் இயந்திரங்கள், பசுமைக்குடில் அமைத்தல் உள்ளிட்டவைக்கு, 1.46 கோடி ரூபாய் மதிப்பில் உதவி என, 174 விவசாயிகளுக்கு, 3.56 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தி.மு.க., - எம்.பி.,க்கள் சிவலிங்கம், மலையரசன், டி.ஆர்.ஓ., ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

50 விவசாயிகள் பயன்

பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் துறை, 'அட்மா' திட்டத்தில், 50 விவசாயிகள் பஸ் மூலம், சிறுதானிய திருவிழாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள், சிறுதானிய கருத்தரங்கம், கண்காட்சியை பார்வையிட்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா செய்திருந்தனர்.

Advertisement