புது கட்டடத்தில் அருங்காட்சியகம் திறப்பு


சேலம்: சேலம் அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல், மானுடவியல், ஓவியங்கள், சிற்பங்கள், நாணயங்கள், விலங்கியல், தாவரவியல், பழங்கால ஆயுதங்கள், தபால் தலைகள் உள்பட, பல்வேறு தலைப்புகளில் ஏராளமான பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


அழகாபுரம் கூட்டுறவு வீடு கட்டும் சங்க வளாகத்தில் செயல்பட்டதால், சொந்த கட்டடம் கட்ட, அஸ்தம்பட்டி அருகே கன்னங்குறிச்சி பிரதான சாலையில், 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது.
அங்கு, 5 கோடி ரூபாய் மதிப்பில் தரை, முதல் தளம் என, 9,838 சதுர அடியில் பிரமாண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. 6 மாதங்களாக அருங்காட்சியகத்தில் இருந்த பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள், முதுமக்கள் தாழிகள், ஆயுதங்கள், பிரமாண்ட மாதிரிகள் ஆகியவற்றை சொந்த கட்டடத்தில் இடமாற்றி, பீடங்கள் கட்டி காட்சிப்படுத்தும் பணி நடந்தது.


இந்நிலையில் நேற்று, சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம், புது கட்டடத்தில் அரசு அருங்காட்சியகத்தை, மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், அருங்காட்சியகத்தில் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லையரசு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement