பாலியல் குற்றவாளியுடன் என்ன தொடர்பு: முன்னாள் அதிபர் கிளிண்டனிடம் 6 மணி நேரம் விசாரணை

10


நியூயார்க்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்து, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பார்லி குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.


அமெரிக்காவை சேர்ந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். நிதி ஆலோசகரான இவர், சிறுவர், சிறுமியரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். தண்டனை காலத்தில் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அரசியல், தொழில் துறை பிரபலங்களுடன் தொடர்பு இருந்தது. இது தொடர்பான விசாரணை ஆவணங்களை, அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு வருகிறது.


இதில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தொழிலதிபர் பில் கேட்ஸ் உள்ளிட்டோர், எப்ஸ்டீன் நடத்திய பார்ட்டிகளில் கலந்து கொண்டது தெரியவந்தது. இந்த விவகாரம், அமெரிக்காவில் பெரும் சர்ச்சையான நிலையில், எப்ஸ்டீன் தொடர்பு பற்றிய விசாரணைக்கு வருமாறு பார்லி குழு, கிளிண்டனை அழைத்தது. அதன்படி குழுவினர் முன்னிலையில் கிளிண்டன், வாக்குமூலம் அளித்தார். அவரிடம் குழு உறுப்பினர்கள் 6 மணி நேரம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை, உள்ளரங்கில் மேற்கொள்ளப்பட்டது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. தான் தவறு எதுவும் செய்யவில்லை என்றும், எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளி என்று தனக்குத் தெரியாது என்றும் கிளிண்டன் தெரிவித்தார். பார்ட்டிகளில் கலந்து கொண்ட பெண்களை தனக்குத் தெரியாது; அவர்களுடன் உறவும் கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.சில நாட்களுக்கு முன், கிளிண்டன் மனைவி ஹிலாரியும் இதேபோன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


எப்ஸ்டீன் விவகாரம், சர்வதேச அளவிலும் பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார். உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் போர்கே பிரண்டே, இந்த பிரச்னையால் பதவி விலகியுள்ளார். பிரிட்டனுக்கான அமெரிக்க துாதர் பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement