ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடும் தாக்குதல் மூண்டது போர்!
டெஹ்ரான் : அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, 'ஆப்பரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில், ஈரான் மீது நேற்று மிகப்பெரிய வான்வழி தாக்குதலை துவக்கின. இதற்கு பதிலடியாக, சவுதி அரேபியா உட்பட பல மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது, ஈரான் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அவசர உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடையே, 'அணுசக்தியை ஆயுதத்திற்கு பயன்படுத்த மாட்டோம்' என்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2015ல் கையெழுத்தானது.
ஈரானின் இந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் முதல் பதவி காலத்தின்போது, 2018ல் விலகினார்; தொடர்ந்து, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
தன்னிடம் அபரிமிதமாக உள்ள யுரேனியம் தாதுவை, ஈரான் செறிவூட்டி வந்தது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.



அழுத்தம்
கடந்தாண்டு ஜனவரியில், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், சில முக்கிய அம்சங்களை சேர்த்து, ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள, டிரம்ப் ஆர்வம் தெரிவித்தார்; ஆனால், ஈரான் மசிந்து கொடுக்கவில்லை.
இதற்கிடையே, கடந்தாண்டு ஜூன் மாதம், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், தாக்குதல் நடத்தின.
அதில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை அழித்ததாக அமெரிக்கா கூறியது. ஆனால், ஈரான் தொடர்ந்து யுரேனியத்தை செறிவூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
தற்போது, ஈரானில் பொருளாதார பின்னடைவு காரணமாக, விலைவாசி உயர்ந்துள்ளதைக் கண்டித்து, அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தை ஒடுக்க, பாதுகாப்புப் படைகளை ஏவிய ஈரான் அரசு, தடைகளை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெருக்கடி
மேலும், அமெரிக்க போர் கப்பல்களை, ஈரான் கடற்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார். அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட, ஈரானுக்கு டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து, அணுசக்தி திட்டம் குறித்து பேச்சு நடத்த, ஈரான் சம்மதம் தெரிவித்தது.
பேச்சு நடந்ததெல்லாம் 'ஜுஜுபி?'
இதற்கு மத்தியஸ்தம் செய்ய, மேற்காசிய நாடான ஓமன் ஒப்புக்கொண்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில், கடந்த 6ம் தேதி முதற்கட்டமாகவும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், 17ம் தேதி, இரண்டாம் கட்டமாகவும் அமெரிக்கா - ஈரான் இடையே, இரு சுற்று மறைமுக பேச்சுக்கள் நடந்தன.
இதையடுத்து, நேற்று முன்தினம், மூன்றாம்கட்ட பேச்சு, மீண்டும் ஜெனிவாவில் நடந்தது. இப்பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மத்தியஸ்தம் செய்யும் ஓமன் தெரிவித்திருந்தது; அடுத்தகட்ட பேச்சு, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வியன்னாவில் நாளை நடைபெறுவதாகவும் இருந்தது.
இந்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சு முடிந்த மறுநாளே, ஈரானுடன் நடந்த பேச்சில் தமக்கு திருப்தி இல்லை என்றும், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட மறுப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். மேலும், சமீபத்தில் அமெரிக்க பார்லிமென்டில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை தாக்குவதற்கான ஏவுகணைகளை, ஈரான் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து, இஸ்ரேலுடன் இணைந்து, 'ஆப்பரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில், ஈரான் மீது நேற்று, மிகப்பெரிய வான்வழி தாக்குதலை, அமெரிக்கா நடத்தியது. ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் குண்டு வீசப்பட்டன.
ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகம் மற்றும் அவரின் குடியிருப்பு பகுதி அருகில், ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதிபர் மாளிகை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம், உளவுத்துறை அமைச்சகம், ராணுவ அமைச்சக அலுவலகங்கள் உள்ளிட்டவை, தாக்குதலுக்குள்ளாகிய முக்கிய இடங்கள்.
போன் இணைப்புகள் 'கட்!
'
அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இஸ்பஹான், முக்கிய ராணுவ வளாகம் மற்றும் ஏவுகணை சோதனை தளம் அமைந்துள்ள பார்ச்சின், ஈரானின் ஒரே அணு மின் நிலையம் அமைந்துள்ள, துறைமுக நகரமான புஷெர் ஆகிய நகரங்களிலும், குண்டு வீச்சு நடந்துள்ளது.
ஆன்மிக மையமாகவும், நிலத்தடி அணுசக்தி நிலையங்களை கொண்டதாகவும் உள்ள கும், ஏவுகணை தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு தளங்கள் உள்ள கராஜ் மற்றும் கர்மான்ஷா, ஏவுகணை தளங்கள் உள்ள வடமேற்கு ஈரானின் தப்ரீஸ், இலாம் மற்றும் லொரெஸ்தான் உள்ளிட்ட நகரங்கள் குண்டு வீசி தாக்கப்பட்டன.
தாக்குதலுக்கு பின், டெஹ்ரானின் பல பகுதிகளில், மொபைல்போன் மற்றும் இணைய தள சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஈரான் ராணுவத்தின் பல தலைமையகங்கள் மற்றும் ராணுவ முகம்கள், குண்டு வீச்சில் அழிக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திறனை, முழுதுமாக அழிப்பதே இத்தாக்குதலின் நோக்கம் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானும், இதற்கு பதிலடியாக, இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட், ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது, ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், தன் வான்வெளியையும் மூடியுள்ளது. ஈரான் மட்டுமின்றி, இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளும், தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
இஸ்ரேல் முழுதும் அவசரநிலை
ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல், நாடு முழுதும் அவசரநிலையை அறிவித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு, மக்கள் பாதுகாப்பு அறைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் தலைவர் கமேனி, தற்போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீதான தாக்குதலுக்கு ஒரு வகையில் இஸ்ரேலின் அழுத்தமும் காரணமாக கூறப்படுகிறது. 'ஈரான், காலத்தை கடத்துவதற்காகவே பேச்சு நடத்துகிறது. எனவே, ராணுவ நடவடிக்கை எடுப்பதே ஒரே தீர்வு' என இஸ்ரேல், அமெரிக்காவை வலியுறுத்தியதே இத்தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனால், மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடரும் என்று இரு தரப்பும் கூறியுள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
@block_B@ z ஈரான் மீதான மிகப்பெரிய போர் நடவடிக்கைக்கு, 'ஆப்பரேஷன் எபிக் பியூரி' என பெயரிட்டுள்ளதாக, சமூக ஊடக பதிவு வாயிலாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூனில், ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, 'மிட்நைட் ஹேமர்' என்றும், நடப்பாண்டு துவக்கத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைதுக்கான நடவடிக்கைக்கு, 'ஆப்பரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' என்றும் பெயரிடப்பட்டிருந்தது.block_B
@block_B@ தாக்குதல் நடந்த இடங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தன் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக, மேற்காசிய நாடுகளில் உள்ள பல அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
• பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படை பிரிவு. அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படை தலைமையகமாகும். இத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, பஹ்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது
• மத்திய கிழக்கிலேயே அமெரிக்காவின் மிகப்பெரிய விமான தளமான, கத்தாரின் அல் - உடைத் விமான தளம்
• குவைத்தில் உள்ள அலி அல் - சலேம் விமான தளம்
• ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபிக்கு அருகில் உள்ள அல் - தப்ரா விமான தளம் • ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள ஐன் அல் - ஆசாத் விமான தளம் மற்றும் எர்பில் நகரில் உள்ள அமெரிக்க துாதரகம்
• ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள். ஈரானின் இத்தகைய தாக்குதல்களால், வளைகுடா நாடுகள் அனைத்தும் போர்க்களமாக மாறியுள்ளன. இது உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை, பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, 'செங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை தாக்குவோம்' என அறிவித்துள்ளளது.block_B
@block_B@ அமெரிக்காவின் நிபந்தனைகளும் ஈரானின் நிலைப்பாடும்
அமெரிக்கா
• ஈரானின் போர்டோ, நடான்ஸ் மற்றம் இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை முழுமையாக அகற்ற வேண்டும்
• ஈரான் இதுவரை செறிவூட்டி வைத்துள்ள அனைத்து யுரேனியத்தையும் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்
• அணு ஆயுத தயாரிப்புக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காலாவதியாகக்கூடிய ஒப்பந்தமாக இல்லாமல், அவை நிரந்தர தடையாக இருக்க வேண்டும்
• அணுசக்தி மட்டுமின்றி, அமெரிக்காவை தாக்கக்கூடிய நீண்ட துார ஏவுகணை திட்டங்களையும் ஈரான் கைவிட வேண்டும்.
ஈரான்
• யுரேனியம் செறிவூட்டல் அளவை, 1.5 சதவீதமாக குறைக்க தயார். மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை அதனை நிறுத்தி வைக்கவும் தயார்
• ஆனால், அணுசக்தி மையங்களை அழிப்பதோ அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாட்டிற்கு அனுப்பவோ முடியாது
• மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒரு சிறிய அளவு யுரேனியத்தை, செறிவூட்ட அனுமதிக்க வேண்டும்.block_B
@block_B@ கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் உயரக்கூடும் இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்., 20ம் தேதி வரை, சராசரியாக 66 அமெரிக்க டாலராக இருந்த பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, வரும் நாட்களில் 20 சதவீதம் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 80 டாலரை எட்டக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச கச்சா எண்ணெய் வினியோகத்தில், கிட்டத்தட்ட 20 சதவீதம், ஈரானுக்கும், ஐக்கிய அரபு எமிரேட் - ஓமன் நாடுகளுக்கிடையே ஓடும், 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியாகவே செல்கிறது. வர்த்தகத்தை தடுக்கும் நோக்கில், ஈரான் இதை ஒரு நாள் முடக்கினால் கூட, கச்சா எண்ணெய் விலை, பீப்பாய்க்கு 120 - 150 டாலர் வரை அபரிமிதமாக உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா, தன் கச்சா எண்ணெய் தேவையில், 90 சதவீதத்தை, இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது. இதில், 40 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. அமெரிக்க வரிவிதிப்பு அச்சுறுத்தலால், ரஷ்ய எண்ணெயை வாங்குவதிலும் தற்போது சிக்கல் உள்ளது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பொருளாதாரத்தை, நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கும் என கூறப்படுகிறது.block_B
@block_B@ விமானங்கள் ரத்து! மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் துவங்கியுள்ளதால் அப்பிராந்தியம் வழியாக செல்லும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக, 'ஏர் இந்தியா' மற்றும் 'இண்டிகோ' நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நம் நாட்டிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் பெரும்பாலான விமானங்கள், மேற்கு ஆசிய வான் பரப்பு வழியையே பயன்படுத்துகின்றன. தற்போதைய தாக்குதல் சூழல் காரணமாக, ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள், மேற்கு ஆசிய நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும், நேற்று நள்ளிரவு வரை ரத்து செய்வதாக அறிவித்தன. மேலும், மேற்கு ஆசியாவில் இருந்து புறப்பட இருந்த இணைப்பு விமானங்களும், ரத்து செய்யப்பட்டன. டில்லியில் இருந்து இஸ்ரேலின், டெல் அவிவ் நோக்கி நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அங்கு தாக்குதல் துவங்கியதும், நடுவழியில் விமானம் திருப்பி விடப்பட்டு, மும்பை வந்தடைந்தது. விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மேற்கு ஆசியா செல்லும் பயணியர் விமான நிலையம் செல்லும் முன் தங்களது விமான நிலையை சரிபார்க்க வேண்டும். தகவல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். 'அடுத்த சில நாட்கள், மேற்கு ஆசியா செல்லும் விமான சேவைகளில் தடங்கல்கள் ஏற்படலாம்' என கூறியுள்ளனர்.block_B
@block_B@ உதவி எண் ஈரானில் உள்ள இந்திய துாதரகம் அந்நாட்டில் உள்ள
இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், 'எச்சரிக்கையுடன்
இருங்கள்; வெளியில் செல்வதை தவிர்க்கவும். செய்திகளை தொடர்ந்து
கவனிக்கவும், துாதரகத்தின் அடுத்தடுத்த வழிகாட்டுதல்களை பின்பற்றவும்' என
கூறப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக
+989128109115 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.block_B
@block_B@ செங்கடலை தாக்க திட்டம்! ஏமனை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி
கிளர்ச்சியாளர்கள், ஈரானுக்கு ஆதரவாக, செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது
தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். சர்வதேச முக்கிய கடல் போக்குவரத்து
பாதையாக செங்கடல் உள்ளது.block_B
@block_B@ ஈரான் பள்ளி மீது
தாக்குதல்: 85 பேர் பலி இஸ்ரேல்- - அமெரிக்க படைகள் இணைந்து நேற்று நடத்திய
வான்வழி தாக்குதலில், ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணம், மினாப் நகரில் உள்ள
பெண்கள் துவக்கப் பள்ளி இடிந்து விழுந்ததில் மாணவியர் உட்பட 85 பேர்
கொல்லப்பட்டனர்; 45 பேர் படுகாயமடைந்தனர்.block_B
மேலும்
-
மருத்துவமனை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று
-
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் நடைமேடை பொருத்தும் பணி துவக்கம்
-
* ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் திட்டம் என்னாச்சு பயிற்சி கூட்டம் நடத்த இடம் தேடும் அவல நிலை
-
கழிவுநீர் குளமாக மாறிய பெரிய கண்மாய்
-
நெரிசலான பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து அரசு கட்டடங்கள்
-
100 நாள் வேலையால் முடங்கும் விவசாய பணிகள்--