ஈரானுக்கு சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகள் ஆதரவு

3

பீஜிங்; மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநிறுத்த ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று சீனா, வட கொரியா ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த தாக்குதல்களை இறையாண்மையை மீறுவதாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளன.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. தாக்குதல்களில் ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி கொல்லப்பட்டார். இருப்பினும், தாக்குதல்களை இரு நாடுகளும் நிறுத்தவில்லை.

பதில் தாக்குதல்கள் நிச்சயம் இருக்கும் என்று ஈரானும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களை உலகின் பல நாடுகள் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், வடகொரியா, சீனா ஆகிய நாடுகள் ஈரான் மீதான தாக்குதல்களை கண்டித்துள்ளன. மத்திய கிழக்கில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தி இருக்கின்றன.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது; ஈரான் நாட்டு தலைவரை கொல்வது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மீறலின் உச்சமாகும். இந்த தாக்குதல்கள் ஐநாவின் நோக்கங்கள், பன்னாட்டு நாடுகள் இடையேயான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது.

சீனா இந்த தாக்குதல்களை கடுமையாகவும், வலிமையாகவும் சீனா கண்டிக்கிறது. ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பதற்ற நிலைமையை மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். மத்திய கிழக்கு மற்றும் உலகநாடுகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணும் கூட்டு முயற்சியை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு சீனா வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கை என்று அறிக்கை ஒன்றில் வடகொரியா கண்டித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை மீறும் ஒரு இழிவான கொலை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தி உள்ளனர்.


ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை மலேசியா கண்டித்துள்ளது. உடனடி போர்நிறுத்தம் அவசியம் என்று அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

உடனடி போர்நிறுத்தம், மக்களின் பாதுகாப்பு மற்றும் தீவிர பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று மலேசியா அழைப்பு விடுக்கிறது. இத்தகைய ஒரு நெருக்கடியை போரால் தீர்க்க முடியாது. ராஜ தந்திரம், அரசியல் நெஞ்சுரம் இதற்கு தேவை.

இவ்வாறு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறி உள்ளார்.

Advertisement