மத்திய கிழக்கில் போர் பதற்றம் எதிரொலி; துபாய் பன்முக கலாசார பொழுதுபோக்கு மையம் மூடல்
துபாய்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பதால் துபாயில் உள்ள உலகளாவிய பன்முக கலாசார பொழுதுபோக்கு மையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் தாக்குதலில் இறங்கி உள்ளது. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் காணப்படுகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம்,குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலில் இறங்கி இருக்கிறது.
அமெரிக்காவின் ராணுவ தளங்கள், அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களை ஈரான் விட்டு வைக்கவில்லை. போர் எதிரொலியாக வளைகுடா நாடுகளிலும் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.
இந் நிலையில் துபாயில் உள்ள உலகளாவிய பன்முக கலாசார பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மார்ச் 1ம் தேதி மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் இதற்கான உத்தரவை வெளியிட்டு உள்ளது.
அனைத்து சுற்றுலா தலங்கள், உணவகங்கள், ரிசார்ட்டுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தங்கள் வருகையை உறுதி செய்யும் முன்பாக பொழுதுபோக்கு மையம் திறக்கப்பட்டு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஜெபல் ஜெய்ஸ் பகுதியில் உள்ள மிக உயரமான மலை சிகரத்தை பார்வையிடவும் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.