இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஹோபர்ட்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 185 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 3-0 என, தொடரை முழுமையாக கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. ஹோபர்ட் நகரில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி, ஜார்ஜியா ஜோடி கைகொடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது ஜார்ஜியா (62) அவுட்டானார். அபாரமாக ஆடிய அலிசா ஹீலி, 98 பந்தில் 158 ரன் (2X6, 27X4) விளாசினார். அனாபெல் (23) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த பெத் மூனே, தன்பங்கிற்கு சதம் கடந்து கைகொடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 409 ரன் எடுத்தது. மூனே (106 ரன், 1X6, 1-0X4), நிகோலா கேரி (34) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி, ஸ்னே ராணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (0) ஏமாற்றினார். பிரதிகா (27), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (25), தீப்தி சர்மா (29) சோபிக்கவில்லை. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (42), ஸ்னே ராணா (44) ஓரளவு கைகொடுத்தனர். ஹர்லீன் தியோல் (14), ரிச்சா கோஷ் (18), ஸ்ரீசரணி (11) நிலைக்கவில்லை.

இந்திய அணி 45.1 ஓவரில் 224 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அலானா கிங் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகி விருதை அலிசா ஹீலி வென்றார்.

Advertisement