ஆட்சியின் இறுதி நாட்களிலும் மக்கள் மூச்சை திணறடிக்கிறது திமுக: அண்ணாமலை

16

சென்னை: திமுக அரசு அதன் இறுதி நாட்களில் கூட, தமிழக மக்களை தொடர்ந்து மூச்சுத் திணறடித்து வருகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு. திருநெல்வேலி மாவட்டம் பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதையில் 6 இளைஞர்கள் டீக்கடையில் இருந்த இரண்டு பேரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசமின்றி திக்கெட்டும் கஞ்சா புழக்கம் அதிகரித்து, தமிழக இளைஞர்களின் வாழ்வைச் சீரழிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சிதைத்து வருவது கொடூரமானது.

தனது திறனற்ற நிர்வாகத்தால் எங்கு பார்த்தாலும் கஞ்சா மயமாக்கி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் மக்கள் நலனையும் ஒரு சேர கொன்றுவிட்டு, 'வெல்வோம் ஒன்றாக' என்று திமுக அரசு சூளுரைப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.




தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில், குடிபோதையில் இருந்த ஒரு கும்பல் ஒரு கிராமத்திற்குள் நுழைந்து, கொடிய ஆயுதங்களுடன் தாக்குதலைத் தொடங்கியது. செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த ஒடிசாவைச் சேர்ந்த ஜான் மற்றும் திரிநாத் கட்டா ஆகியோர் தற்செயலாக அந்தப் பகுதி வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.


இந்த ஊழல் நிறைந்த திமுக அரசின் கீழ் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலை இதுதான். கடந்த 5 ஆண்டுகளில் 65,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவும், 8000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் மாநிலத்தில் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளன என்பதைக் காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தை பாதித்த வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுக அரசு அதன் இறுதி நாட்களில் கூட, தமிழக மக்களை தொடர்ந்து மூச்சுத் திணறடித்து வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய வெறியாட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய கஞ்சா மாடல் திமுக அரசை வரும் தேர்தலின் மூலம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது.


கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் களைந்து பொதுமக்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய திமுக அரசு, அன்றாடம் அரங்கேறும் குற்றங்களைத் தடுக்க தவறியும், அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் உதவித் தொகை எனும் பெயரில் பணம் கொடுத்து மக்களை சரிக்கட்ட நினைப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் செல்லுபடியாகாது.


இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் அதே நேரத்தில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தைச் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிய திமுகவின் ஆட்டமும் கொட்டமும் வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைவது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

Advertisement