தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்

டில்லி: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சூப்பர்-8' (பிரிவு-1) போட்டியில், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஏற்கனவே தென் ஆப்ரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே அரையிறுதி வாய்ப்பை இழந்ததால், இப்போட்டிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.


சிக்கந்தர் அரைசதம்: 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஜிம்பாப்வே அணிக்கு மருமாணி (7), பிரையன் பென்னட் (15), டியான் மையர்ஸ் (11) ஏமாற்றினர். ரியான் பர்ல் (5), டோனி முன்யோங்கா (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஜிம்பாப்வே அணி 87/5 ரன் எடுத்து திணறியது.

பின் இணைந்த கேப்டன் சிக்கந்தர் ராசா, கிளைவ் மடாண்டே ஜோடி ஆறுதல் தந்தது. சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய சிக்கந்தர் ராசா, 29 பந்தில் அரைசதம் எட்டினார். ஆறாவது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்த போது மபாகா பந்தில் சிக்கந்தர் ராசா (73 ரன், 4X6, 8X4) அவுட்டானார். கார்பின் பாஷ் பந்தில் பிராட் ஈவன்ஸ் (8) போல்டானார்.

ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்தது. மடாண்டே (26), மசகட்சா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

பிரவிஸ் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (0), கேப்டன் மார்க்ரம் (4) ஏமாற்றினர். ரியான் ரிக்கிள்டன் (31 ரன், 4X6) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த டிவால்டு பிரவிஸ், டேவிட் மில்லர் ஜோடி நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்த போது முசரபானி பந்தில் மில்லர் (22) அவுட்டானார். சிக்கந்தர் ராசா பந்தில் பிரவிஸ் (42 ரன், 4X6, 2X4) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (21*), ஜார்ஜ் லிண்டே (30*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. தென் ஆப்ரிக்க அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட் சாய்த்தார்.


ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

வெற்றி கேப்டன்

'டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக வெற்றி பெற்றுத்தந்த கேப்டன் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் 2வது இடம் (15 வெற்றி, 16 போட்டி) பிடித்தார். முதலிடத்தில் இந்தியாவின் தோனி (21 வெற்றி, 33 போட்டி) உள்ளார்.


நிகிடி முதலிடம்
சர்வதேச 'டி-20' போட்டியில் அதிக விக்கெட் சாய்த்த தென் ஆப்ரிக்க பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் நிகிடி. இதுவரை 63 போட்டியில், 90 விக்கெட் சாய்த்துள்ளார். அடுத்த இரு இடங்களில் ஷம்சி (89 விக்கெட், 70 போட்டி), ரபாடா (82 விக்கெட், 78 போட்டி) உள்ளனர்.

Advertisement