அமெரிக்க மதுபான விடுதியில் 3 பேர் சுட்டுக்கொலை
டெக்சாஸ்: ஆஸ்டினில் மதுபான விடுதியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள புபோர்டு பகுதியில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இங்கு எப்போதும் போல் பலரும் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் தோன்றிய மர்ம நபர் ஒருவர் திடீரென தாம் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தோரை சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
ஒரு கணம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மதுபான விடுதியில் உள்ளவர்கள் உறைந்து போயினர். இதில் மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் 17 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
துப்பாக்கிச்சூடு பற்றிய தகவல் அறிந்த போலீசாரும், மீட்புக்குழுவினரும் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மர்ம நபர், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட எத்தனித்தார். சுதாரித்துக் கொண்ட போலீசார், மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.
தாக்குதலுக்கான காரணமும், இதில் சம்பந்தப்பட்டவர் யார் என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.