73 நரிக்குறவர்கள் குடும்பம் வீடு கட்ட நிலம் ஒதுக்கீடு

சென்னை: 'தினமலர்' நாளிதழ் செய்தியை தொடர்ந்து, 73 நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டுமனை வழங்கி உள்ளது.

தமிழகத்தில், எஸ்.சி., -- எஸ்.டி., சமூக மக்களுக்கு, அரசு சார்பில், காகித வடிவிலான இலவச வீட்டுமனை பட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில், சம்பந்தப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்தது.

அதன்படி, சிவகங்கை மாவட்டம் கல்லிவட்டிமேடு கிராமத்தை சேர்ந்த, 73 நரிக்குறவர்கள் குடும்பங்களுக்கு, அரசு மூன்று முறை பட்டா வழங்கியும், நிலம் அளவீடு செய்து தராமல் இழுத்தடித்து வந்தது.

இதுகுறித்து, நம் நாளிதழில், கடந்த மாதம் 17ம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து, அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகம், சிறுகூடல்பட்டி கிராமத்தில், நிலம் அளவீடு செய்து வழங்கி உள்ளது.

இதுகுறித்து, பயனாளி ராஜு கூறியதாவது:

கடந்த 2023ல், ஆ. தெக்கூர் பகுதியில், இலவச வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் அங்கு நிலம் வழங்கவில்லை. அடுத்து இரண்டு முறை பட்டா வழங்கியும், நிலம் அளவீடு செய்து தரப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது சிவங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி கிராமத்தில், பட்டாவிற்கான நிலம் வழங்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொருவருக்கும் தலா, 302 சதுர அடி வீதம், 73 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்டு உள்ளது. இங்கு, 'தாட்கோ' சார்பில் குடியிருப்புடன் கூடிய, 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்க கோரிக்கை விடுத்தோம். அதற்கான, பணிகளும் துவக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement