குவைத் வான்வெளியில் பறந்த அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்

2


குவைத் நகரம்: குவைத் வான்வெளியில் பறந்த அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பல போர் விமானங்கள் விழுந்து நொறுங்கின.


ஈரான் ஆட்சியாளர் கமேனியை அமெரிக்கா கொலை செய்த பிறகு, போர் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, துபாய், கத்தார் போன்ற நாடுகளில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.


இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், குவைத் வான்வெளியில் பறந்த அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பல போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இந்தத் தகவலை குவைத் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இன்று காலை பல அமெரிக்க ராணுவ விமானங்கள், ஈரான் தாக்குதலில் சேதமடைந்து விழுந்து நொறுங்கின. அதில் பயணித்த வீரர்கள் அனைவரும் முழு பாதுகாப்புடன் இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


காயமடைந்த அமெரிக்க விமானப் படையினர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் நிலை சீராக உள்ளது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



முன்னதாக, குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், அந்தக் கட்டடத்தில் கரும்புகை கிளம்பியது.

Advertisement