தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவங்கவில்லை; நயினார் நாகேந்திரன் தகவல்

திருச்சி: தேஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவங்கவில்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
வரும் சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி சென்னையை தொடர்ந்து மதுரையிலும் தேஜ கூட்டணி பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது. தமிழக தேஜ கூட்டணி கட்சி தலைவர் இபிஎஸ் தலைமையில் தமிழக தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திருச்சியில் வரும் 11ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.



அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி வருகிறார். தேஜ கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை. அதற்கான நேரம் இல்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகே பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் டில்லி பயணம் குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ''மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இபிஎஸ் சென்றுள்ளார் என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார். இதற்கு, தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்காக, பாஜவுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவது குறித்து பேச்சு நடத்த இபிஎஸ் சென்று உள்ளாரா என நிருபர்கள் கேள்வி எழுப்பியதும், ''அது குறித்து இபிஎஸ்க்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் மட்டும் தெரியும்'' என நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement