கூட்டணியை தொடரும் எண்ணத்தில் காங்., தி.மு.க., உள்ளன: கார்த்தி கருத்து

3

தஞ்சாவூர்: கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான், காங்கிரஸ், தி.மு.க., இரண்டு கட்சிகளும் செயல்படுவதாக, காங்கிரஸ் எம்.பி.,கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.


தஞ்சாவூரில் அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க.,விடம், முன்பு இருந்த ஆளுமை இல்லை. முன்பெல்லாம், கூட்டணி வைக்க, அவர்களை நாடித்தான், அரசியல் கட்சிகள் சென்றன. இன்றைக்கு, கட்சிக்குள் பஞ்சாயத்து என்றால் கூட, டில்லி சென்று, பா.ஜ.,வை நாடும் நிலை உள்ளது. சசிகலாவால் பெரிய தாக்கம் இருக்காது. அரசியலில், அவரது நேரம் முடிந்து விட்டது.


விஜயின், த.வெ.க., முழுமையான அரசியல் கட்சியாகி விட்டதாக, ஏற்க மாட்டேன். அது, ரசிகர் மன்றம் போலத்தான் நடக்கிறது. விஜய், பெரிய நடிகர் என்பதால், அதிக அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால், அவர்களின் ஓட்டுகள் எல்லாம் சீட்டுகளாகுமா என்பது கேள்விக்குறிதான்.


ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி, தேர்தலை சந்திக்க, பெரிய கூட்டணியை அமைப்பது தான் வெற்றிகரமான அரசியல். அதன்படி, முதல்வர் ஸ்டாலின், தன்னை விமர்சித்தவர்களை கூட, அரவணைக்கிறார். தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் இணைந்தது கூட, ஸ்டாலினின் சாதுர்யமாக பார்க்கிறேன்.


தி.மு.க., கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளன. எனவே, 'கிவ் அண்ட் டேக்' பாலிசி அடிப்படையில் புரிதல் வரும். ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்பதை, தி.மு.க., பேசி தீர்மானிக்கும். கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான், காங்கிரஸ், தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement