தொடர் தோல்விகளை எதிர்கொள்ளும் சீன வான் பாதுகாப்பு அமைப்பு

7


பீஜிங்: பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் தயாரிப்பான ஹெச்கியூ 9 பி வான் பாதுகாப்பு கவசம் தோல்வியை சந்தித்து உள்ளது.


வான் பாதுகாப்பு கவசமான ரஷ்யாவின் எஸ் 300 மற்றும் அமெரிக்காவின் பேட்ரியாட் பிஏசி -2 ஐ முன்மாதிரியாக கொண்டு சீனா ஹெச் கியூ - 9 பி என் வான்பாதகாப்பு கவசத்தை உருவாக்கியது. கடந்த 2006 ல் பரிசோதனைக்கு பிறகு பயன்பாட்டில் கொண்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமைப்பை சீனா பயன்படுத்தி வருகிறது. 260 கிமீ சுற்றளவில் இருந்து வரும் ஏவுகுணைகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த அமைப்பை பீஜிங், திபெத் , ஷின்ஜியாங் மற்றும் தென் சீன கடல் பகுதியில் நிறுவியிருந்தது.


மேலும், இந்த கவசத்தை பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கும் விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ஆப்பரேஷன்சிந்தூர் நடவடிக்கையின் போது இந்த வான் பாதுகாப்பு அமைப்பு சரியாக வேலை செய்யவில்லை. இதனை தாண்டி சென்று பாகிஸ்தான் விமானபடைதளங்களை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தன.


இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் தனது சொந்த தயாரிப்பான பாவர் -373 வான் பாதுகாப்பு கவசத்துடன், சீனா தயாரிப்பையும் பயன்படுத்தி வந்தது.


ஆனால், இந்த இரண்டு பாதுகாப்பு கவசங்களை மீறி இரு நாடுகள் தாக்குதல் நடத்தியதுடன், அந்த நாட்டின் ஆட்சியாளராக விளங்கிய கமேனியையும் கொன்றுவிட்டன. அதிநவீன போர் விமானங்கள், டிரோன்கள் ஆகியவை மூலம் வான்பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் கட்டளை அமைப்புகள் குறிவைத்து சீன வான்பாதுகாப்பு அமைப்பை முடக்கின.


ரேடார் அமைப்புகள், சென்சார் மற்றும் லாஞ்சர் இடையிலான இணைப்பை இருநாட்டு விமானப்படைகள் துண்டித்து அவற்றை செயல் இழக்க செய்தது தெரியவந்துள்ளது.


அதிக அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வண்ணம் ஹெச் கியூ - 9 பி வடிவமைக்கப்பட்டாலும், அதிநவீன போர் விமானங்கள் மற்றும் குறைந்த உயரத்தில் இருந்து துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை சமாளிப்பதில் இந்த அமைப்பு பின்னடைவை சந்தித்துள்ளது. தீவிரமான போர் சூழலில் இந்த அமைப்பு போதிய அளவில் விமானங்ளை கண்காணிக்க முடியவில்லை. அதிவேகமாக நகரும், குறைந்த உயரத்தில் இருந்து தாக்கும் ஏவுகணைகளுக்கு எதிராகவும் தோல்வியையே சந்தித்தன என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


இரண்டாவதுமுறையாக சீன வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வியை சந்தித்து உள்ளதால், அதன் செயல்திறன் குறித்த பாதுகாப்பு ஆய்வாளர்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

Advertisement