திரிசங்கு நிலையில் தி.மு.க., - காங்., உறவு

3

தி.மு.க., கூட்டணியில், 30 சட்டசபை தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா 'சீட்'கள் வேண்டும் என, ராகுல் பிடிவாதம் பிடிக்கும் நிலையில், 27 சட்டசபை தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு மேல் தர இயலாது என, ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தி.மு.க., - காங்., கூட்டணி, திரிசங்கு நிலையில் உள்ளது.


தமிழகத்தில், 20 ஆண்டு களுக்கும் மேலாக, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இரு கட்சிகளின் தலைமையும், நட்புடன் இருந்ததால், தேர்தலை எவ்வித இடையூறுமின்றி சந்தித்து வந்தன. ஆனால், சமீபகாலமாக நடந்த பல்வேறு நிகழ்வுகள், இரு கட்சி களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.



நெருடல்





எனினும், வரும் சட்டசபை தேர்தலை, காங்கிரசுடன் இணைந்தே எதிர்கொள்ள தி.மு.க., தரப்பு முடிவெடுத்தது. ஆனால், நடிகர் விஜய், தன் கட்சியுடன் கூட்டணி சேருவோருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் எனக் கூறியதும், களம் மாறத் துவங்கியது.

காங்கிரசை நோக்கி, த.வெ.க., வலுவான துாண்டிலை வீச, தி.மு.க.,வுடன் இருந்த நெருடல்களை காங்கிரசார் பெரிதாக்கினர். த.வெ.க.,வுடன் கூட்டணி செல்லலாம் என வெளிப் படையாக பேசத் துவங்கினர்.


இந்த சூழலில், தி.மு.க., தரப்பில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசிய காங்கிரஸ் தரப்பு, '41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி அதிகாரத்தில் 25 சதவீத பங்கு, இரண்டு ராஜ்யசபா சீட், துணை முதல்வர் பதவி' என, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தது.


தி.மு.க., தரப்பில், 'காங்கிரசுக்கு 21 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்' என, 'கூலாக' தெரிவித்தனர். இது காங்கிரஸ் தலைமையை, தி.மு.க., மீது அதிருப்தி அடைய வைத்தது.


நிர்ப்பந்தம்





இதற்கிடையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ளதால், அதற்குள் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், இரு தரப்புக் கும் ஏற்பட்டது. நெருக்கடியான சூழலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினே கூட்டணி பேச்சில் களம் இறங்கினார்.

நேற்று முன்தினம் மாலை, சென்னை நுங்கம்பாக்கத்தில், நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு, காங்கிரஸ் எம்.பி.,யான ப.சிதம்பரத்தை சந்தித்துள்ளார்.


அப்போது, 'மூத்த காங்., தலைவரான நீங்கள், இரு கட்சிகளுக்கும் இடையே இருக்கும் நெருடல்களை நீக்கி, தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடிக்கக் கூடாதா...' என,
சிதம்பரத்திடம் கேட்டுள்ளார்.


அதையடுத்து, 'காங்கிரஸ் தலைமையிடம் பேசுகிறேன்' என்று சொன்ன சிதம்பரம், இரு தரப்பிடமும் மாறி மாறி பேசினார். முதல்வர் ஸ்டாலினை, அவரது வீட்டில் நேற்று சந்தித்து பேசினார். ஆனால், நேற்று இரவு வரை, சாதகமான முடிவு எட்டப்படவில்லை. அதனால், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு திரிசங்கு நிலையில் உள்ளது.


இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுவதாவது: முதல்வர் ஸ்டாலினை முதலில் சந்தித்த பின், அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சிதம்பரம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதையடுத்து நேற்று காலை, காங்., முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், பொதுச்செயலர் வேணுகோபால் ஆகியோரோடு, 'ஜூம் மீட்டிங்'கில், கார்கே பேசியுள்ளார்.


கட்டாயம்




அப்போது, 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கடந்த முறை காங்., போட்டியிட்ட 25 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக கூறியுள்ளார்' என கார்கே தெரிவித்துள்ளார். அதை ஏற்க மறுத்த ராகுல், 'ஆட்சியில் பங்கு, உள்ளாட்சியில் பங்கு குறித்து, இப்போது பேச வேண்டாம். ஆனால், 30 தொகுதிகளுக்கு மேல், கட்டாயம் வேண்டும். இரு ராஜ்யசபா சீட் வேண்டும். அதில் ஒன்றை இப்போதும், மற்றொன்றை 2028லும் கொடுத்தால் போதும்.


'ஆனால், ராஜ்யசபாவுக்கு யாரை அனுப்புவது என்பதை தி.மு.க., தீர்மானிக்கக் கூடாது; காங்கிரசே முடிவெடுக்கும். இந்த விஷயங்கள் அனைத்தையும் காங்., தலைவர் என்ற முறையில் கார்கேவே பேசி முடிக்கலாம். இதில், எவ்வித மாற்றத்தையும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது' என தீர்மானமாக சொல்லி விட, அதை அப்படியே சிதம்பரத்திடம் சொல்லி, ஸ்டாலினிடம் தெரிவிக்க வைத்தார் கார்கே.



நேற்று மதியம் 12:15 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சிதம்பரம் சென்றார்.


பட்டியல்






அப்போது, முதல்வர் ஸ்டாலினை, கார்கேயுடன் பேச வைத்துள்ளார். கார்கேவும், ராகுல் விருப்பத்தை ஸ்டாலினிடம் சொல்லி உள்ளார்.

கடந்த தேர்தலில், காங்கிரசுக்கு கொடுத்த 25 தொகுதிகளை விட்டுக் கொடுப்பதில், தி.மு.க.,வுக்கு தயக்கம் இல்லை என பேசத்துவங்கிய ஸ்டாலின், ராஜ்யசபா சீட் விஷயத்தில் ராகுல் சொன்னதை ஏற்றுக் கொண்டார். ஆனால், கூடுதல் தொகுதிகளை விட்டுக் கொடுப்பதில், தி.மு.க.,வுக்கு இருக்கும் நெருக்கடிகளை பட்டியல் போட்டுள்ளார்.


'கடந்த தேர்தலில் தி.மு.க., 183 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அதில், 135 சீட்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், 26 தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. இப்போது, அந்த கட்சிகள் எல்லாம், தனி சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்திக்கின்றன.


'அதோடு, தி.மு.க., அரசுக்கு எதிரான ஓட்டுகள் உள்ளன. அதையெல்லாம் சரிசெய்து, தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்றால், கூடுதல் எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும். அதனால் தான் இத்தனை இழுபறி' என, ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.


அதன்பின், 'கடைசியாக சொல்கிறேன்; 27 தொகுதிகளை தி.மு.க., - காங்.,கிற்கு விட்டுக் கொடுக்கும். அதைக் கடந்து எதுவும் செய்ய முடியாது. பா.ஜ., எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் தான், இரு கட்சிகளும் இணைந்து பயணிக்கின்றன. அதை தொடர்வதில் தி.மு.க., உறுதியாக இருக்கிறது.


ஒரே கொள்கை




'காங்.,கும் உறுதியாக இருந்தால், இணைந்தே பயணிக்கலாம். இல்லையென்றால், நண்பர்களாக ஒரே கொள்கையில் தேர்தலை சந்திக்கலாம்' என, ஸ்டாலின் பேச்சை முடித்துள்ளார்.



'இதை ராகுலிடமும், சோனியாவிடமும் சொல்கிறேன். அவர்கள் என்ன பதில் சொல்கின்றனரோ, அதன்படி முடிவெடுக்கலாம்' என, கார்கே கூறியுள்ளார். இதையடுத்து, ஸ்டாலின் வீட்டில் இருந்து சிதம்பரம் வருத்தத்துடன் புறப்பட்டு சென்றுள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.



@block_P@

சோனியாவை அணுக முடியாமல் தவிக்கும் தி.மு.க., தலைமை




சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை தி.மு.க., இறுதி செய்து வருகிறது. '41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள், ஆட்சியில் பங்கு' என்ற காங்கிரசின் கோரிக்கையை, ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்டது. ஆனால், தனது கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்த காங்கிரஸ் கட்சி, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பேசிக் கொண்டிருப்பது தி.மு.க.,விற்கு கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டபோது, தி.மு.க., தலைமை நேரடியாக சோனியாவை தொடர்புகொண்டு உடன்பாடு செய்தது. அதுபோல இந்த முறையும் சோனியாவை அணுகி பிரச்னையை முடித்து விடலாம் என, தி.மு.க., தலைமை நினைத்தது. இதனால், கடந்த ஜனவரி 28ம் தேதி டில்லி சென்ற தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, ராகுலை சந்தித்துப் பேசினார். அப்போது, 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை ராகுல் வலியுறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, சோனியாவை சந்தித்துப் பேசி, தொகுதிப் பங்கீட்டை முடிக்க, சிதம்பரம் உள்ளிட்டோர் வாயிலாக முயற்சித்துள்ளது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 41 தொகுதிகள்; 2024 லோக்சபா தேர்தலில், 12 தொகுதிகள் பெற வேண்டும் என, ராகுல் உறுதியாக இருந்தார். ஆனால், கடைசியில் சோனியாவுடன் பேசி, குறைந்த தொகுதிகளை கொடுத்து தி.மு.க., உடன்பாடு செய்து விட்டது. இந்தத் தேர்தலில் அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்பதால், சோனியாவை தி.மு.க., சார்பில் யாரும் அணுக முடியாத நிலையை ராகுல் ஏற்படுத்தினார். கடந்த தேர்தல்களில் காங்கிரசுக்கு மாற்று வழிகள் இல்லாமல் இருந்தது. இப்போது த.வெ.க., இருப்பதால், அதிக தொகுதிகளைப் பெற்றே ஆக வேண்டும் என்பதில், ராகுல் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.block_P

- நமது நிருபர் -

Advertisement