வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 கிலோ தங்க நகைகள் கொள்ளை
விழுப்புரம்: விழுப்புரத்தில், பட்டப்பகலில், கத்திமுனையில் நகை வியாபாரியிடம், 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த, நான்கு பேர் கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விராட்டிகுப்பம், பாதை ஜனகராஜ் கார்டனைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 43. வீட்டிலேயே தங்க நகைகள் செய்யும் தொழில் செய்யும் இவர், நகைகள் செய்து, ரயிலில் சென்னைக்கு சென்று அங்குள்ள நகைக்கடைக்கு கொடுத்து வருகிறார்.
நேற்று வீட்டிலிருந்து, 4 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, கடை ஊழியர் முரளி, 26, என்பவருடன் மொபட்டில் ரயில் நிலையத்திற்கு சென்றார்.
விழுப்புரம் பெருமாள் கோவில் தெரு, கோட்டை விநாயகர் கோவில் எதிரே காலை 11:20 மணியளவில் சென்றபோது, பின்னால் ஒரு பைக் மற்றும் ஒரு மொபட்டில் முகத்தில் கர்ச்சிப் கட்டிக்கொண்டு வந்த நான்கு பேர் கும்பல், ராஜமாணிக்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, நகையை பறித்து தப்பியது. அவற்றின் மதிப்பு, 6 கோடியே 20 லட்சம் ரூபாய்.
தகவலறிந்த எஸ்.பி., சாய் பிரனீத், ஏ.எஸ்.பி., ரவீந்திரநாத் குப்தா, டவுன் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் டவுன் போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ராஜமாணிக்கம் வீட்டில் இருந்து கிளம்பியபோது, இரண்டு வாகனங்களில், மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
அவர்கள், கோட்டை விநாயகர் கோவில் அருகே ராஜமாணிக்கத்தை மிரட்டி கொள்ளையடித்தது பதிவாகியுள்ளது. மேலும், முதல் கேமரா பதிவில் முகத்தை மூடாமல் இருந்த மர்ம நபர்கள், கொள்ளையடிக்கும் இடத்தில் உள்ள கேமரா பதிவில், முகத்தை மூடியுள்ளது தெரியவந்தது.
மேலும்
-
பயங்கரவாத அமைப்புகளுக்கு குறி; ஈரானை தொடர்ந்து ஈக்வடாரில் அமெரிக்கா தாக்குதல்
-
வந்தது ஞானோதயம்: ஒற்றுமையே பலம் என்கிறார் மாணிக்கம் தாகூர்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 சரிவு; 2 நாட்களில் ரூ.3,680 குறைவு
-
தஞ்சையில் விஜய் பொதுக்கூட்டம் முதல் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 04)!
-
சாலை வசதி செய்து தர வேண்டி கோட்டூர் மலைவாழ் மக்கள் மறியல்
-
கலசப்பாடி மலை கிராமத்திற்கு மினி பஸ் இயக்கம் துவக்கம்