செஞ்சி அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து சென்னை வழக்கறிஞர் உட்பட 4 பேர் பலி

1

செஞ்சி: செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் கவிழ்ந்து மூழ்கியதில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் உட்பட, நான்கு பேர் இறந்தனர்.

சென்னை, கெருகம்பாக்கம், குன்றத்துார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வினோத், 38; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.

மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் சேகர், 27; மாநில கபடி வீரர். கெருக்கம்பாக்கம் ராஜா, 45; ஆட்டோ ஓட்டுநர். கொளப்பாக்கம் ஜெயமுருகன், 42; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நால்வரும் நண்பர்கள்.

இவர்கள், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, வினோத்துக்கு சொந்தமான 'ஸ்விப்ட்' காரில், பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்காக, திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர். கிரிவலம் முடிந்து, நேற்று காலை, 7:30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டனர்.

காரை, ராஜா ஓட்டினார். 8:15 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அருகே வந்தபோது, ராஜாவுக்கு துாக்க கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ராமச்சந்திரன் என்பவரின் விவசாய கிணற்றின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கிணற்றுக்குள் பாய்ந்தது.

செஞ்சி தீயணைப்பு வீரர்கள், சத்தியமங்கலம் போலீசார், கிரேன் உதவியுடன் இரண்டரை மணி நேரம் போராடி, காரை மீட்டனர். காருக்குள் இருந்து வினோத், சேகர், ராஜா ஆகியோரின் உடல்களும், ஜெயமுருகன் உடல் கிணற்றுக்குள் இருந்தும் மீட்கப்பட்டன. சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திற்கு சொந்தமான இந்த சாலையை விரிவுபடுத்தியபோது, விபத்து நடந்த கிணற்றையொட்டி, 100 அடி நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என, செஞ்சி ஆர்.டி.ஓ., 2024ல் உத்தரவிட்டும், 30 அடி நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டி உள்ளனர். ஆர்.டி.ஓ., சுட்டிக்காட்டியபடி, தடுப்புச் சுவர் கட்டியிருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்.

Advertisement