749 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியில் நல உதவிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 749 பயனாளிகளுக்கு, 18.7 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலமற்ற மக்கள் மற்றும் பட்டா இன்றி குடியிருப்பவர்களும், பயன்பெறும் வகையில், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு, மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021 முதல் இதுவரை 33,919 பயனாளிகளுக்கு, 579.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலமற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வருவாய் துறை சார்பில், 655 பயனாளிகளுக்கு நேற்று அமைச்சர் காந்தி வீட்டு மனை பட்டா வழங்கினார்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 13.1 லட்சம் ரூபாய் மதிப்பில் திருமண உதவித்தொகையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், 80 பயனாளிகளுக்கு 3.82 லட்சம் ரூபாய் மதிப்பில், தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ், 6 பயனாளிகளுக்கு 30,000 ரூபாய் மதிப்பிலான மாவு அரைக்கும் இயந்திரங்களும் என, மொத்தம் 749 பயனாளிகளுக்கு, 18.7 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கைத்தறி துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.

தொடர்ந்து, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டம் 2022- - 23ன் கீழ் காஞ்சி புரம் மாநகராட்சி, வேகவதி ஆற்றின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலம் மற்றும் தார் சாலையை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் சினேகா, தி.மு.க.,- - எம்.பி. ,செல்வம், தி.மு.க., - -எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement