ஆலன் சதம்... பைனலில் நியூசிலாந்து: தொடரும் தென் ஆப்ரிக்கா சோகம்
கொல்கட்டா: ஐ.சி.சி., 'நாக் அவுட்' போட்டிகளில் தென் ஆப்ரிக்கா சோகம் தொடர்கிறது. நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில், ஆலன் அதிவேக சதம் கைகொடுக்க, நியூசிலாந்து அணி, 9 விக்கெட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
குயின்டன் ஏமாற்றம்: தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. மாட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்சர் விளாசினார் குயின்டன். மெக்கோன்ச்சி வீசிய 2வது ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய குயின்டன் (10), அடுத்த பந்தில் அவுட்டானார். ஐந்தாவது பந்தில் ரியான் ரிக்கிள்டன் 'டக்-அவுட்' ஆனார்.
பிரவிஸ் ஆறுதல்: அடுத்து வந்த டிவால்டு பிரவிஸ், மெக்கோன்ச்சி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது ரன் கணக்கை துவக்கினார். ஜேம்ஸ் நீஷாம் வீசிய 5வது ஓவரில் மார்க்ரம் ஒரு சிக்சர், பிரவிஸ் 2 பவுண்டரி அடிக்க 17 ரன் கிடைத்தது. 'பவர்-பிளே' ஓவரின் (1-6) முடிவில் தென் ஆப்ரிக்க அணி 48/2 ரன் எடுத்திருந்தது.
ரச்சின் ரவிந்திரா 'சுழலில்' மார்க்ரம் (18) சிக்கினார். சான்ட்னர், ரச்சின் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார் பிரவிஸ். ரச்சின் பந்தில் டேவிட் மில்லர் (6) ஆட்டமிழந்தார். நீஷாம் 'வேகத்தில்' பிரவிஸ் (34 ரன், 2X6, 3X4) அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 10.2 ஓவரில் 77/5 ரன் எடுத்து திணறியது.
யான்சென் நம்பிக்கை: பின் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென் ஜோடி கைகொடுத்தது. சான்ட்னர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய யான்சென், ரச்சின் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 13.5 ஓவரில் 100 ரன்னை எட்டியது. நீஷாம் வீசிய 18வது ஓவரில் ஸ்டப்ஸ், யான்சென் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 22 ரன் கிடைத்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது பெர்குசன் 'வேகத்தில்' ஸ்டப்ஸ் (29) போல்டானார். பெர்குசன் வீசிய 19வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட யான்சென், 27 பந்தில் அரைசதம் கடந்தார்.
ஹென்றி வீசிய கடைசி ஓவரில் கார்பின் பாஷ் (2), ரபாடா (0) வெளியேறினர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. யான்சென் (55 ரன், 5X6, 2X4), மகாராஜ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ரச்சின், ஹென்றி, மெக்கோன்ச்சி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஆலன் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பர்ட், ஆலன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இருவரும், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். யான்சென் வீசிய 3வது ஓவரில் ஆலன், செய்பர்ட் தலா ஒரு சிக்சர் விளாச 18 ரன் கிடைத்தது.
ரபாடா வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் செய்பர்ட். மறுமுனையில் அசத்திய ஆலன், கார்பின் பாஷ் வீசிய 6வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 4 பவுண்டரி விளாசினார். 'பவர்-பிளே' ஓவரின் (1-6) முடிவில் நியூசிலாந்து அணி 84/0 ரன் எடுத்திருந்தது.
நிகிடி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய செய்பர்ட், 28 பந்தில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய ஆலன், 19 பந்தில் அரைசதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்த போது ரபாடா 'வேகத்தில்' செய்பர்ட் (58 ரன், 2X6, 7X6) போல்டானார். கேஷவ் மகாராஜ் வீசிய 12வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஆலன், யான்சென் வீசிய 13வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 33 பந்தில் சதம் விளாசி வெற்றி தேடித்தந்தார்.
நியூசிலாந்து அணி 12.5 ஓவரில் 173/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆலன் (100 ரன், 33 பந்து, 8X6, 10X4), ரச்சின் (13) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஆலன் வென்றார்.
கெய்லை முந்தினார்
'டி-20' உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் (33 பந்து) விளாசினார் நியூசிலாந்தின் ஆலன். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (47 பந்து, எதிர்: இங்கிலாந்து, 2016) அதிவேக சதமடித்திருந்தார்.
இரண்டாவது முறை
'டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு நியூசிலாந்து அணி 2வது முறையாக முன்னேறியது. இதற்கு 2021ல் பைனல் வரை சென்ற நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
* தென் ஆப்ரிக்க அணி 3வது முறையாக (2009, 2014, 2026) அரையிறுதியோடு வெளியேறியது.
இரண்டாவது இடம்
தென் ஆப்ரிக்காவின் யான்சென், ஸ்டப்ஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தது. 'டி-20' உலக கோப்பை அரங்கில் 6வது அல்லது அதற்கு மேலான விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடிகள் வரிசையில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டாய்னிஸ், வேட் ஜோடி (81* ரன், எதிர்: பாக்., 2021, துபாய், அரையிறுதி) உள்ளது.
மேலும்
-
இலங்கை அருகே ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்தது: அமெரிக்க கடற்படை 87 பேர் பலி; 61 பேர் மாயம்
-
அரசு கல்லுாரியில் லேப்டாப் வழங்க கோரி போராட்டம்
-
பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
-
மாற்றுத் திறனாளி பெண் தூக்கிட்டு தற்கொலை
-
சுட்ட மண் நகைகள்!
-
தினமும் ரூ.10,000 ' கட்டிங் ' வசூலிக்கும் போலீஸ் அதிகாரி!