அரசு கல்லுாரியில் லேப்டாப் வழங்க கோரி போராட்டம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் லேப்டாப் வழங்ககோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெண்ணெய்நல்லுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதுகலை பாடப்பிரிவில் 150 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்கள் தங்களுக்கு பிராஜெக்ட், இன்டென்ஷிப் போன்றவற்றை பயில்வதற்காக லேப்டாப் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தி, கல்லுாரி முதல்வர் இந்திராவிடம் மனு அளித்திருந்தனர்.

மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டிக்கும் வகையில், மாணவர்கள் நேற்று காலை 10 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து, கல்லுாரியின் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, 12:00 மணியளவில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Advertisement