சுட்ட மண் நகைகள்!

சுட்ட மண் எனப்படும், 'டெரகோட்டா'வில் நகைகள் தயாரித்து, விற்பனை செய்து வரும், தஞ்சை மாவட்டம், திருவத்தேவன் கிராமத்தை சேர்ந்த ராகவி: களிமண்ணை பயன்படுத்தி செய்யப்படும் நகைகளுக்கு தான், டெரகோட்டா நகைகள் என்று பெயர். இதில் பல வண்ணங்கள் கிடைக்கும். பார்ப்பதற்கும், பிரமாண்டமாக இருக்கும்.

நான், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, கைவினை நகைகள் செய்வது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. முதலில் பட்டு நுாலில் நகைகள் செய்து பார்த்தேன். அது எளிமையாக இருந்தது. அப்படியே பயிற்சி செய்து, ஒரு கட்டத்தில் டெரகோட்டா நகைகள் செய்ய ஆரம்பித்தேன்.

பள்ளி செல்லும் வயதில், இவற்றை எல்லாம் செய்து கொண்டிருந்ததை பார்த்த என் அப்பா, 'முதலில் 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கும் வழியை பார்' என்று கண்டிப்புடன் கூறினார். படிப்பில் கவனம் செலுத்தி, 10ம் வகுப்பில், நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன். என் தனிப்பட்ட ஆர்வம், கல்வியை பாதிக்காது என்பதை, வீட்டில் உள்ளோர் புரிந்து கொண்டனர்.

பிளஸ் 2 முடித்திருந்த சமயம், களிமண்ணில் செய்யப்பட்ட டெரகோட்டா நகைகள், நாகரிகமாக மாறி வருவதை கவனித்தேன். இதை சுயதொழிலாக மாற்றி, பொருளாதார ரீதியில் பயனடைய முடியும் என்பதும் புரிந்தது. அதன்பிறகே என் திறமை, கைத்தொழிலாக மாறியது.

முதலில் களிமண்ணை பயன்படுத்தி, நமக்கு தேவையான உருவத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். பின் வடிவமைத்த பொருட்களை, மூன்று நாட்கள் காய வைக்க வேண்டும். காய்ந்த பின் மண் சட்டியில் கரி, உமி போன்றவற்றை பயன்படுத்தி சுட வேண்டும்.

அதன் மீது நாம் விரும்பும் வண்ணத்தை கடைசியாக பூச வேண்டும்; பின் கோர்க்க வேண்டும். இந்த முறையில் வளையல், நெக்லஸ், தோடுகள், கை கடிகாரம் போன்ற பல ஆபரணங்களை செய்ய முடியும்.

பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அப்படியே, 'நீட்' தேர்வுக்கும் என்னை தயார் செய்து கொண்டேன். நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால், சென்னை அரசு சித்த மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தது. தற்போது, மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன்.

சக மாணவியரிடமும், தெரிந்தவர்களிடமும் நகைகளை விற்பனை செய்ய துவங்கினேன். இப்போது படிப்பையும் விட்டுக் கொடுக்காமல், விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில், டெரகோட்டா நகைகள் தயாரிப்பில் ஈடுபடுகிறேன். நல்ல வருமானமும் வருகிறது. என்னுடைய செலவுகளை இதன் வாயிலாக சமாளித்துக் கொள்கிறேன். மீத பணத்தை வீட்டுக்கும் அனுப்பி விடுகிறேன்.

Advertisement