இந்தியாவை சமாளிக்குமா இங்கிலாந்து 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில்...

மும்பை: 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. எதிரணியின் வலுவான சுழல் தாக்குதலை சமாளித்து, இந்தியா பைனலுக்கு முன்னேற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடரின் துவக்கத்தில் பலமான அணியாக காணப்பட்ட இந்தியா, வலுவான எதிரணிகளுக்கு எதிராக திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
'சூப்பர்-8' சுற்று முதல் போட்டியில் சறுக்கிய பின் (எதிரணி-தெ.ஆப்.,) சுதாரித்துக் கொண்டது இந்தியா. 'டாப்-3' இடதுகை பேட்டர்கள் வரிசையில் மாற்றம் செய்தது, சஞ்சு சாம்சனை களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் சேர்த்தது போன்ற முடிவுகள் நன்கு கைகொடுத்தன. அடுத்த இரு போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி, ஆறாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
சர்வதேச அரங்கில் அறிமுகம் ஆன 11 ஆண்டில், முதன் முறையாக, பெரிய தொடரின் காலிறுதி போன்ற வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் 97 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்து, இந்திய அணியை கரை சேர்த்துள்ளார் சாம்சன் 31 (3 போட்டி, 143 ரன்). இது அவரது தன்னம்பிக்கையை அதிகரித்து இருக்கும். தவிர சக துவக்க வீரர் அபிஷேக் சர்மாவும் (6ல் 80) சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக அமையலாம்.
தொடரின் துவக்கத்தில் அசத்திய இஷான் கிஷான் (224), நன்கு பழக்கமான மும்பை மண்ணில் மீண்டு வர வேண்டும். கேப்டன் சூர்யகுமார் (231), திலக் வர்மா (178), 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா (172) என, பலருக்கும், இம்மைதானத்தின் பிரிமியர் தொடர் அனுபவம், கைகொடுக்கும் என நம்பலாம். அடுத்து வரும் ஷிவம் துபேவும் (166, 5 விக்.,) சிறப்பாக செயல்படுகிறார்.
வருண் நம்பிக்கை
பவுலிங்கை பொறுத்தவரையில் பும்ரா (9 விக்.,), அர்ஷ்தீப் (8) கூட்டணியில் மாற்றம் இருக்காது. அதேநேரம், மைதானத்தில் அளவு சிறியது என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி (12 விக்.,), அக்சர் படேல் (5ல் 7) துல்லியமாக செயல்பட்டு, ரன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். அரையிறுதியில் திடீரென குல்தீப்பை அணியில் சேர்த்து, திடீரென இந்தியா 'ரிஸ்க்' எடுக்காது எனத் தெரிகிறது.
கேப்டன் பலம்
இங்கிலாந்து அணிக்கு துவக்கத்தில் அனுபவ பட்லர் (7 போட்டி, 62 ரன்), பில் சால்ட் (125) ஜோடி 'பார்ம்' இல்லாமல் தடுமாறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து அணியை மீட்ட கேப்டன் ஹாரி புரூக் (228), வில் ஜாக்ஸ் (191 ரன், 7 விக்.,), பெத்தெல் (175), ஆல் ரவுண்டர் சாம் கர்ரான் (149) கைகொடுக்க, ஆறாவது முறையாக அரையிறுதியில் களமிறங்குகிறது.
பந்து வீச்சில் 'சீனியர்' ஆர்ச்சர் (10 விக்.,), 'ஷார்ட் பிட்ச்' பந்துகள் தொல்லை தரலாம். 7 போட்டியில் 4ல் ஆட்ட நாயகன் ஆன சுழற்பந்து வீச்சாளர் வில் ஜாக்ஸ், மீண்டும் அச்சுறுத்த உள்ளார். இவருடன் அடில் ரஷித் (11 விக்.,), லியாம் டாசன் (10), என மூன்று 'சுழல்களை' நமது பேட்டர்கள் சமாளிப்பதில் தான், இந்தியாவின் வெற்றி தெரியவரும். தவிர நியூசிலாந்துக்கு எதிராக அசத்திய ரேஹன் அகமதுவும் தொல்லை தரலாம்.

மூன்றாவது முறை
'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் 2022ல் இந்தியாவை வென்ற இங்கிலாந்து, 2024ல் இங்கிலாந்தை சாய்த்த இந்திய அணிகள், பைனலில் சாதித்து சாம்பியன் ஆகின.
தற்போது தொடர்ந்து, மூன்றாவது முறையாக (2026) இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி கோப்பை தட்டிச்செல்லுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

யார் ஆதிக்கம்
'டி-20' உலக அரங்கில் இரு அணிகளும் 5 முறை மோதின. இந்தியா 3, இங்கிலாந்து 2ல் வென்றன.
* சர்வதேச அரங்கில் மோதிய 29 போட்டியில் இந்தியா 17, இங்கிலாந்து 12ல் வெற்றி பெற்றன.
* 2026ல் இரு அணிகள் மோதிய 5 போட்டியில் இந்தியா 4 ல் வென்றது. 1ல் தோற்றது.

ஆடுகளம் எப்படி
அரையிறுதி நடக்கவுள்ள வான்கடே ஆடுகளத்தில், லீக் சுற்றில் இரு போட்டிகள் நடந்தன. பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகலாம். பந்தில் திருப்பம் குறைவாக இருக்கும் என்பதால், இரு தரப்பிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். முதலில் களமிறங்கும் அணி குறைந்தது 200 ரன்னுக்கும் மேல் எடுக்க வாய்ப்புள்ளது.
* மும்பையில் இன்று வானம் தெளிவாக காணப்படும். மழைவர வாய்ப்பில்லை.

Advertisement