இலவச 'இ.வி., சார்ஜிங்' பயிற்சி இளைஞர்கள் 19 பேருக்கு பணி ஆணை

புதுச்சேரி: மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் நடந்த இ.வி., சார்ஜிங் தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்ற 19 இளைஞர்களுக்கு, பயிற்சி முடிந்த கையோடு தனியார் நிறுவனத்தில் வேலைக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் 'பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின்' கீழ், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு குழுமம் சார்பில், இ.வி., ( மின்சார வாகன) சார்ஜிங் நிறுவல் நுட்ப நிபுணர்' சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடந்தது. கடந்த டிசம்பர் 23ம் தேதி துவங்கிய இப்பயிற்சி, நேற்றுடன் நிறைவடைந்தது.

புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடந்த நிறைவு விழாவில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மிதா தலைமை தாங்கினார். தொடர்ந்து, பயிற்சியை முடித்த 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பாக செயல்பட்ட 19 பேருக்கு, நெட்டப்பாக்கம் 'லுாகாஸ் - டி.வி.எஸ்., நிறுவனத்தில் 'இ.வி., டிரெய்னி' பணிக்கான நியமன ஆணைகளை செயலர் ஸ்மிதா வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாசுக்கட்டுப்பாடு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், குவாண்டனிக்ஸ் டெக்சர்வ் தலைமை நிர்வாக அதிகாரி கேசவன், பி.என்.எல்., தொழில்நுட்ப நிறுவன நிர்வாக இயக்குனர் துரைராஜ், லுாகாஸ் - டி.வி,எஸ்., மனிதவள அதிகாரி பாஸ்கர், சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் மாசுக்கட்டுப்பாடு குழும அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். திட்ட அலுவலர் நித்தியா நன்றி கூறினார்.

Advertisement