வரும் 30ல் கருத்து கேட்பு கூட்டம் ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்க!

அன்னுார்: 'நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை உள்ளோர், வரும் 30ம் தேதி நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கலாம்' என, நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து கருவலுார், அன்னுார், பொகலுார் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., துாரத்துக்கு, ரூ.238 கோடி மதிப்பில் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணிகள், ஓராண்டாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், ஊராட்சி வாரியாக நான்கு மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அன்னுார் பேரூராட்சி, ஒட்டர்பாளையம், பொகலுார் ஊராட்சிகளில் கருத்து கேட்கப்பட்டு விட்டது.

அடுத்த கட்டமாக, கஞ்சப்பள்ளி மற்றும் வடவள்ளி ஊராட்சிகளை சேர்ந்த நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வரும் 30ம் தேதி காலை 11:00 மணிக்கு அன்னுார் கைகாட்டியில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை, உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்தலுக்கான மாவட்ட வருவாய் அலுவலர், தனி தாசில்தார்கள், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

'நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை உள்ள நில உரிமையாளர்கள், வரும் 30ம் தேதிக்குள் நிலம் கையகப்படுத்துவதற்கான மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக மனு கொடுக்கலாம்.

அன்று நடத்தப்படும் கூட்டத்திலும் தெரிவிக்கலாம்' என, மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement