ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விலக்கு அளித்த விவகாரம்; மத்திய அரசுக்கு சசி தரூர் ஆதரவு

18

புதுடில்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா விலக்கு அளித்த விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.



இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்கள் அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை கட்டுக்குள் பராமரிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த விலக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக சாடி வருகின்றன. இது இந்தியாவின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளன.

தனது சொந்தக் கட்சியே விமர்சித்த போதிலும், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சசி தரூர் கூறியதாவது: இந்தியாவின் நலன்களுக்காக மத்திய அரசு எடுத்த முடிவுகளை நீங்கள் உண்மையிலேயே மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.


ரஷ்ய எண்ணெயை வாங்கி சுத்திகரிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு, அந்த விலக்கு அளிக்காவிட்டால், அவர்கள் அமெரிக்காவின் தடையை எதிர்கொள்ள நேரிடும்.சர்வதேச அளவில் அவர்களது ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கும். இந்த விலக்கு காரணமாக அந்த 30 நாட்களுக்கு அவர்கள் வெளிப்படையாக ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கலாம்.


சர்வதேச மோதல்களில் பொது நிலைப்பாடுகளை எடுக்கும்போது அரசு எதிர்கொள்ளும் சவால்களை விமர்சகர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இவ்வாறு சசி தரூர் கூறினார். மத்திய அரசுக்கு ஆதரவாக, சசி தரூர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலட்சியமாக இருக்க முடியாது!



ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு சசி தரூர் அளித்த பேட்டி: போர் நிறுத்தத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். பதற்றத்தைக் குறைத்து, ராஜதந்திர நடவடிக்கைகளைக் கோருவது இந்தியாவின் நலனுக்கு மிகவும் நல்லது.


@quote@இந்தியா ராணுவ ரீதியாக மோதலில் ஈடுபட வாய்ப்பில்லை என்றாலும், போரினால் ஏற்படும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். quote

எங்களைப் பொறுத்தவரை, இது அவர்களின் வாழ்க்கையையும், சிறப்பாகச் செயல்படும் திறனையும், வீட்டிற்கு பணம் அனுப்புவதையும் உண்மையில் பாதிக்கும் ஒன்று. எனவே இந்தியா அலட்சியமாக இருக்க முடியாது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.

Advertisement