ஈரான் போர் எதிரொலி; பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உச்சம்; ஒரு லிட்டர் ரூ.321

10


இஸ்லாமாபாத்: ஈரான் போர் எதிரொலியாக, பாகிஸ்தானில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. பெட்ரோல் 55 ரூபாய் அதிகரித்து லிட்டர் ரூ.321க்கு விற்பனை ஆகிறது.


மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேலிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு பதிலடியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி கடற்பாதையை ஈரான் முடக்கி உள்ளது. பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. இதனால் மக்கள் ஒரே நேரத்தில் பெட்ரோல் பங்குகளுக்கு படை எடுக்கின்றனர்.

பாகிஸ்தானில் இதை சாதகமாக பயன்படுத்தி சில பெட்ரோல் பங்குகள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி பதுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல்வேறு நகரங்களில் மக்கள் அவதியடைந்தனர். அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கும் பெட்ரோல் பங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். அத்தகைய பங்குகளின் உரிமத்தை ரத்து செய்வதுடன், மூடி சீல் வைத்து சட்ட நடவடிக்கை தொடரப்படும் என எச்சரித்துள்ளார்.



விலை எவ்வளவு?




இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு சந்தித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 55 ரூபாய் அதிகரித்து ஒரு பெட்ரோல் ரூ.321.17க்கு விற்பனை ஆகிறது. இது 17 சதவீதம் அதிகமாகும். அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 55 ரூபாய் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.335 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 20 சதவீதம் அதிகமாகும்.

இருப்பு இருக்கிறது!



இதற்கிடையே பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் 28 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீ சல் இருப்பு உள்ளது. இது தவிர 10 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பும், 15 நாட்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவும் கையிருப்பில் உள்ளது. எனவே மக்கள் பீதியடைந்து அதிகப்படியான எரிபொருட்களை வாங்கி சேமிக்க வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement