வெவ்‍வேறு விபத்துகளில் 5 பேர் பலி

திருப்பத்துார் : திருப்பத்துார், வாணியம்பாடி மற்றும் திருவண்ணாமலை அருகே நடந்த, வெவ்வேறு விபத்துகளில் சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.


திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பழனி, 43; ஆம்பூர் நடராஜபுரம் பகுதி கட்டட மேஸ்திரி சதீஷ், 38; இருவரும் ஆம்பூரை அடுத்த மணியாரகுப்பம் கூட்ரோடு பகுதியில், நேற்று முன்தினம் மாலை தனித்தனி ஹோண்டா பைக்கில் சென்றனர். அப்போது பைக்குகள் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ் உயிரிழந்தார்.
* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ், 25; அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் பிரவீன்குமார். இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு, டி.வி.எஸ்., மொபட்டில் ஆரணி சென்று விட்டு திரும்பினர். ஆரணி - வாழப்பந்தல் சாலையில், பையூர் பாறை அருகே, ஐஸ்கிரீம் விற்கும் ஆட்டோ மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஆகாஷ் நேற்று காலை உயிரிழந்தார்.

சிறுவர்கள் உள்பட 3 பேர்



திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கொல்ல கொட்டகையை சேர்ந்தவர் சரசம்மாள், 75; சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, பல்சர் பைக்கில் வாணியம்பாடியில் இருந்து, ஆம்பூர் சென்ற, ஆம்பூரை சேர்ந்த, 18 வயது சிறுவர்கள் இருவர், மூதாட்டி மீது மோதாமல் இருக்க, பிரேக் போட்டனர். ஆனாலும் கட்டுப்பாட்டை இழந்த பைக் மூதாட்டி மீது மோதி, இருவரும் விழுந்தனர். இதில் மூதாட்டி சம்பவ இடத்தில் பலியாயினர். சிறுவர்கள் படுகாயத்துடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்,

Advertisement