தவறுதலாக வெடித்த துப்பாக்கி மான் வேட்டைக்கு சென்றவர் பலி

திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே மான் வேட்டையின்போது, நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், தொழிலாளி பலியானார்.


திருப்பத்துார் மாவட்டம் புதுார் நாடு அடுத்த புங்கம்பட்டு நாடு நடுவூரை சேர்ந்தவர் ராஜேஷ், 35; பழைய பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 60; தொழிலாளிகளான இருவரும் ஆண்டியப்பனுார் அணைக்கு குடிநீர் அருந்த வரும் மானை வேட்டையாட, நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது நாட்டுத்துப்பாக்கியை பிடித்தபடி புளியமரத்தின் மீது ராஜேஷ் ஏறினார். எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து உடலில் குண்டு பாய்ந்து பலியானார். கோவிந்தன் தகவலின்படி சென்ற உறவினர்கள், ராஜேஷின் உடலை டோலி கட்டி எடுத்து வந்தனர். ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து, வீட்டருகே உள்ள நிலத்தில் எரித்தனர்.
இதையறிந்த திருப்பத்துார் தாலுகா போலீசார், புதுார் நாடு மலைக்கு சென்று, பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கோவிந்தனிடமும், உடலை எரித்த ஊர் முக்கிய பிரமுகர்களிடமும், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement